ஹல்த்வானி: 1984ஆம் ஆண்டு சியாச்சினில் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ரோந்துப் பணிக்காக சென்ற இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். பனிப்பாறைகளில் சிக்கிய அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து 12 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. எஞ்சிய வீரர்களின் சடலங்கள் பனிப்பாறைகளில் சிக்கியிருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சியாச்சினில் பனிச்சரிவில் மாயமான ராணுவ வீரர் லான்ஸ் நாயக் சந்திரசேகர் ஹர்போலாவின் உடல், 38 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது உடலை ராணுவத்தினர், உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.
"ஜெய் ஹிந்த்" முழக்கத்துடன் ராணுவ வீரர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சூழ ஹர்போலாவின் சடலம் கொண்டு செல்லப்பட்டது. அவரது சடலத்தை வாங்கிக் கொண்ட குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளை செய்தனர். பின்னர் ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.