இது தொடர்பாக ஆயுஷ் அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவிட்-19 தொற்றுநோய் போன்ற உலகளவிய சிக்கல்களில் மக்களின் நலனைக் காக்க தேவையான மருத்துவ உதவிகள் வழங்குவதை உறுதிசெய்திட திறன்சார்ந்த பிரிவு ஒன்றை உருவாக்க ஆயுஷ் துறை முடிவெடுத்துள்ளது. அதற்குரிய பணிகளை மேற்கொள்ள ஆயுஷ் துறையின் பங்குதாரர்களின் மகத்தான ஆதரவைப் பெற திட்டமிட்டுள்ளது.
இந்த முடிவின் அடிப்படையில், ஆயுஷ் துறையின் பங்குதாரர்கள் பின்பற்ற வேண்டியவை குறித்தும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சகம் தீவிரமாகச் சிந்தித்துவருகிறது.
இந்தத் துறையின் முழுத் திறனை உணர்ந்து, வளர்ச்சி மற்றும் முதலீட்டைத் தூண்டுவதற்கான திறன்சார்ந்த கொள்கையை உருவாக்க திறன்சார்ந்த கொள்கை மற்றும் சேவை எளிதாக்கல் பணியகம் என்ற ஒன்றை அமைச்சகம் தொடங்கவுள்ளது.
ஆற்றல் ஒருங்கிணைப்பு, மேலாண்மை, திறன்வளப் பயிற்சி, மருத்துவக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எஸ்.பி.எஃப்.பி. மேற்கொள்ளும்.
அத்துடன், முதலீடு மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றைப் பின்தொடரும், எளிதாக்கும் பல்வேறு துறைகள், நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கிடையே ஒருங்கிணைப்புப் பணிகளை இந்தப் பணியகம் தீவிரமாக கண்காணிக்கும்.
இந்தத் திட்டத்தில் ஒரு கூட்டாளராக, பணியகத்தின் பணித் திட்டத்தை வடிவமைப்பதற்கும் அதன் குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளை வரையறுப்பதற்கும் ஆயுஷ் அமைச்சகத்துடன் எம் / எஸ் இன்வெஸ்ட் இந்தியா விரிவாக ஒத்துழைக்கும் என அறிவிக்கப்படுகிறது.
ஆயுஷ் அமைச்சகத்தின் திட்டங்களைச் செயல்படுத்த 'இன்வெஸ்ட் இந்தியா' தீவிர பயிற்சிப் பெற்ற மற்றும் நிபுணத்துவ வளங்களைப் பயன்படுத்தும். மேலும், துறைசார்ந்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 'இன்வெஸ்ட் இந்தியா' நிதியுதவி அளிக்கும்.
தொழில் சங்கங்கள், அமைச்சின் துணை அமைப்புகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதித்துவம் போன்ற பல்வேறு பங்குதாரர்களுடன் தொடர்புகளை உருவாக்குவதில் அமைச்சகம் பணியகத்தை ஆதரிக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளது.