ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சோட்டிபோரா (Chotipora)என்ற கிராமத்தில், கடந்த 4ஆம் தேதி சோனு குமார் அலியாஸ் பால்ஜி என்ற சிறுபான்மையின பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த வியாபாரியை, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
இதில் பலத்த காயமடைந்த வியாபாரி, ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி, சோனு குமாரின் குடும்பத்தை சந்திப்பதற்காக, சோபியான் மாவட்டத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில், தன்னை போலீசார் கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சோபியானில் தாக்கப்பட்ட காஷ்மீரி பண்டிட்டின் குடும்பத்தை தான் சந்திக்க கூடாது என்பதற்காக, போலீசார் தன்னை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காஷ்மீரி பண்டிட்கள் வெளியேற்றத்திற்கு ஜம்மு-காஷ்மீர் மக்களும், இஸ்லாமியர்களும்தான் காரணம் என பாஜக பொய்பிரச்சாரம் செய்து வருகிறது" என்றும் குற்றஞ்சாட்டினார்".