மதுரா: மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி தொடர்பான வழக்கின் விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (நவ.18) நடக்கிறது.
மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி என்று கருதப்படும் இடத்தில் கோயில் அமைந்துள்ள பகுதியில் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த இட்கா மசூதி உள்ளது.
இந்த மசூதியை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இட்கா மசூதி அறக்கட்டளை, உத்தரப் பிரதேச சுன்னி மத்திய வக்ஃப் வாரியம், கிருஷ்ண ஜென்ம பூமி அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கிருஷ்ண ஜெனமஸ்தான் சேவா சங்கம் ஆகிய அமைப்புகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி, வழக்கு நவ.18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
இந்த வழக்கு மதுரா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கிற்கு எதிராக அகில இந்திய தீர்த்த புரோகித் மகாசபா மற்றும் மாத்தூர் சதுர்வேதி புருஷோத் உள்ளிட்ட அமைப்புகள் வாதிட்டன. இது “மத வன்முறைக்கு வித்திட்டு நகரத்தின் அமைதியை குலைத்துவிடும்” என்றும் அவர்கள் கூறினார்கள்.
இட்கா மசூதியை அகற்ற வேண்டும் என்ற வழக்கு ரஞ்சனா அக்னிஹோத்ரி என்ற அமைப்பால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ள 13.37 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது.
கோயிலை அபகரித்து கட்டப்பட்டுள்ள இந்த இடத்தை மீட்டு தர வேண்டும் என்று அவர்கள் மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர். அப்போது, இந்த விவகாரத்தில் வழக்கு தொடர சம்மந்தப்பட்ட அமைப்புக்கு உரிமை இல்லை எனத் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக வழக்குரைஞர் முகேஷ் காண்டேல்வால் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி வழக்கு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த நோட்டீஸ்களை நாங்கள் பெற்றுள்ளோம். நவம்பர் 18 ஆம் தேதி எங்கள் தரப்பு ஆவணங்களை மாவட்ட நீதிமன்றத்தில் முன்வைப்போம்” என்றார்.
இதேபோல், உ.பி. சுன்னி மத்திய வக்ஃப் வாரியம் மற்றும் இட்கா அறக்கட்டளையின் வழக்குரைஞர்கள் ஷைலேந்திர துபே மற்றும் தன்வீர் அகமது கூறுகையில், நகரத்தின் அமைதியான சூழ்நிலையை கெடுக்க யாரும் விரும்பவில்லை. விசாரணைக்கு பின்னர் இப்பிரச்னை முடிவுக்கு வரும்” என்றார்.
இதையும் படிங்க: “பதற்றம் நீக்கி அமைதி தருவார் கிருஷ்ணர்”- நடிகை சுஜா வருணி