மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது, தான் தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாவலர்கள் அவரை தூக்கி காரில் உட்கார வைப்பது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயம் அடைந்த அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார். இதுகுறித்து செய்தியானர்களிடம் பேசிய மம்தா, காரில் ஏற முயற்சித்தபோது, சுமார் ஐந்து பேர் தன்னை கீழே தள்ளியதாகவும், இதனால் கால் வீக்கம் அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இது திட்டமிட்ட செயலா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ஆமாம், இது சதிச் செயல்தான். சம்பவம் நடைபெற்றபோது, என்னை சுற்றி காவலர்களே இல்லை" என்றார். நந்திகிராம் தொகுதியிலேயே மம்தா இன்றிரவு தங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கொல்கத்தாவுக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்திருந்தது. இதைத் தொடர்ந்து, மேற்குவங்க காவல்துறை இயக்குநர் வீரேந்தர் மாற்றப்பட்டார். இந்நிலையில், மம்தா தாக்கப்பட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்த சுவேந்தி அதிகாரியை எதிர்த்து மம்தாவே களமிறங்கியுள்ளார்.