மும்பை: இந்தியாவின் மாபொரும் பாடகி லதா மங்கேஷ்கர் நேற்று மறைந்தார். அவரது மறைவு நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டு சென்றுள்ளது. நாட்டின் 36 மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்கள், மிக உயரிய விருதுகள், கோடிக்கணக்கான ரசிகர்கள் என்று அவருடைய வரலாறு நீளுகிறது. இருப்பினும் '1983' உலக கோப்பைக்கும் லதா மங்கேஷ்கருக்கும் உள்ள வரலாறு, அவர் மீதான மரியாதை கோடி பங்கு உயர்த்தும்படி உள்ளது.
இந்திய வரலாற்றில் முக்கியமான நாளாக 1983 ஆண்டு ஜூன் 25ஆம் தேதி மாறுகிறது. ஜாம்பவான்கள் நிறைந்த மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா அணியிடம் தோல்வியை தழுவுகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அதிர்ந்து போகிறார்கள். எதிர்பார்க்காத மகத்தான வெற்றியை பதிவு செய்து கபில் தேவ் தலைமையிலான வீரர்கள் இந்தியா திரும்புகிறார்கள். ஆனால் வீரர்களை வரவேற்கவும் கெளரவப்படுத்தவும் அப்போதைய பிசிசிஐயிடம் போதுமான நிதியில்லை. இதனையறிந்த லதா மங்கேஷ்கர் நிதி திரட்ட இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்கிறார். அந்த காலகட்டத்திலேயே ரூ. 20 லட்சம் நிதி திரட்டி பிசிசிஐயிடம் கொடுக்கிறார். இதன்மூலம் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இதற்கான நிகழ்வு டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. அப்போது உலக கோப்பைக்குப் பின்னால் லதா மங்கேஷ்கர் நிற்கும் கருப்பு-வெள்ளை படமும் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் தனது ட்விட்டர் பக்கத்தில், "மதிப்புக்குரிய லதா அவர்களே, 1983 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு உங்களின் பங்களிப்பை மறக்க முடியாது. வாழ்நாள் முழுவதும் நாங்கள் உங்களுக்குக் கடமைப்பட்டுள்ளோம்" எனப் பதிவிட்டுள்ளார். இப்படி கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட லதா மங்கேஷ்கர் 2011ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை விரதம் இருந்து பார்த்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்; 2 நாள் துக்கம் அனுசரிப்பு