முசாபர்நகர்: கரோனா பெருந்தொற்று காலத்தில் கொத்து கொத்தாக மக்கள் உயிரிழந்தபோது, ஏராளமான நல்ல உள்ளங்கள் தாமாக முன்வந்து தங்களை சமூக சேவையில் ஈடுபடுத்திக் கொண்டனர். கரோனா தீவிரமாக பரவியபோதும் தங்களது உயிரை பணயம் வைத்து, மருத்துவ உதவி, ஆதரவற்றவர்களுக்கு உணவளிப்பது, கரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை எரிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஹீரோக்களை செய்திகளில் பார்த்தோம்.
அதுபோன்ற ஒரு ஹீரோ இன்றளவும் தனது சமூக சேவையை தொடர்ந்து வருகிறார். உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாலு சைனிதான் அவர். உள்ளூர் பெண்களின் மேம்பாட்டிற்கான தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ஷாலு, கரோனா காலம் முதல் இதுவரை 500-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற உடல்களை தகனம் செய்துள்ளார். அவரை அப்பகுதி மக்கள் அனைவரும் 'கிராந்திகாரி' என்றே அழைக்கிறார்கள். அப்படி என்றால், புரட்சியாளர் என்று பொருள்.
ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்த ஷாலு கூறுகையில், "புரட்சிகரமான மனப்பான்மை இருந்தால்தான் மாற்றத்தை கொண்டு வரும் செயல்களை நம்மால் செய்ய முடியும். கரோனா காலத்தில் தகனம் செய்ய ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, ஏராளமான சடலங்கள் தேங்கிக் கிடந்த செய்திகளையும் வீடியோக்களையும் நான் பார்த்தோம். அவை என்னை பாதித்தன. அதனால், எங்கள் தொண்டு நிறுவனத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து உதவ முடிவு செய்தோம்.
அதன்படி குடும்பத்தினர் உரிமை கோராத சடலங்களை நாங்கள் தகனம் செய்தோம். அவர்களுக்கு வாரிசுகளாக மாறி இறுதிச் சடங்குகளை செய்தோம். இப்போதும் எங்கள் பணிகளை தொடர்ந்து செய்கிறோம். இதற்கான இலவச தொடர்பு எண்ணை வழங்கியுள்ளோம். உரிமை கோரப்படாத சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், காவல்துறையினர் எங்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். பின்னர் எங்கள் சேவையை செய்வோம். எங்களிடம் அதிகம் பணம் இல்லை. அதனால், நிதி திரட்ட இணையதளம் ஒன்றை வைத்துள்ளோம். அதில் சிலர் நன்கொடைகளை வழங்குவார்கள். எங்கள் பணிகளை தொடர்ந்து செய்யும் முனைப்புடன் இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:இளைஞரின் மதத்தை அறிய ஆடைகளைக்கழற்றி அவமதித்த கும்பல் - அதிர்ச்சி சம்பவம்!