கேரளா மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 8, 10 மற்றும் 14ஆம் தேதிகளில் மூன்று கட்டமாக நடக்கவிருக்கிறது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கு வெளி மாநிலத்திலிருந்து வாக்களிக்க வருபவர்களைத் தனிமைப்படுத்தும் நாட்கள் உயர்த்த வேண்டாம் என மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கேரளா அரசின் வழிகாட்டுதலின்படி, வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து தேர்தலுக்கு வாக்களிக்க வருபவர்கள் அனைவரும் கட்டாயம் ஏழு நாட்களுக்குத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அதன்பின் அவர்களுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என வந்தால் மட்டுமே தனிமைப்படுத்தல் முடிவுக்கு வரும். இல்லையென்றால், அவர்கள் குறைந்தது 14 நாட்களுக்குக் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் கேரளத்தில் களைகட்டி வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி என அனைத்து உள்ளாட்சிகளுக்குமான தேர்தலில் 50% பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சி.பி.எம், காங்கிரஸ், பா.ஜ.க என அனைத்துக்கட்சிகளிலும் இளம் பெண்களுக்கு அதிகளவு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.