காசர்கோடு: தீண்டாமை என்பது ஏடுகளில் ஒழிந்துவிட்டாலும், இன்றளவும் பல இடங்களில் உயிர்ப்புடன் இருந்து பல உயிர்களை வதைத்து வருகிறது. இதற்கு கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஜடாதாரி கோயிலும் ஒரு சான்று.
இந்த கோயில் என்மகஜே ஊராட்சியில் உள்ளது. சுமார் 600 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலுக்குள் பட்டியலின சமூகத்தைச்சேர்ந்த மக்கள் செல்ல அனுமதி இல்லை. இந்த கோயிலுக்குச்செல்ல சரியான பாதை இல்லை. படிக்கட்டுகள் மட்டுமே உள்ளன. அந்த படிகளையும் பட்டியலின மக்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. படிக்கட்டுகளுக்கு கீழே நின்று வணங்கலாம்.
அதேபோல் கோயிலில் நடைபெறும் அன்னதானம் உள்ளிட்டவற்றிலும் பட்டியலின சமூகத்தைச்சேர்ந்த மக்கள் வஞ்சிக்கப்பட்டனர். இந்த கோயிலில் பல ஆண்டுகளாக இந்த சாதியப்பாகுபாடுகளை, சாதி இந்துக்கள் பின்பற்றி வந்தனர்.
இதனிடையே கடந்த 2018ஆம் ஆண்டு, பட்டியலின சமூகத்தைச்சேர்ந்த கிருஷ்ண மோகன் தலைமையிலான இளைஞர்கள் குழு, இந்த கட்டுப்பாடுகளை மீறி ஸ்ரீஜடாதாரி கோயிலுக்குள் நுழைந்தது. அவர்கள் கடவுளுக்கு அலங்காரமும் பூஜைகளும் செய்ததாகத்தெரிகிறது.
இதையறிந்த ஆதிக்க சாதியினர், பல ஆண்டுகள் வழக்கத்தை மீறியதாகவும், அதனால் கடவுள் கோபித்துக் கொண்டார் என்றும் கூறி, கருவறையில் இருந்த சிலையை எடுத்துவந்து கோயிலின் முற்றத்தில் வைத்தனர். பிறகு கோயிலை இழுத்து மூடிவிட்டனர்.
சுமார் 4 ஆண்டுகளாக இந்த கோயில் பூட்டிக் கிடப்பதால், கோயில் வளாகம் முழுவதும் புதர் மண்டிக் காணப்படுகிறது. கோயிலை மீண்டும் திறக்க வேண்டும் என உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால், ஆதிக்க சாதியினர் இதற்கு ஒத்துழைக்கத் தயாராக இல்லை.
பல்வேறு வகையிலும் தாங்கள் வளர்ந்துவிட்டோம் என கேரள மக்கள் கூறிக்கொள்ளும் நிலையில், அங்கு சாதியப் பாகுபாடு காரணமாக கடவுளையும், பட்டியலின மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.
இதையும் படிங்க: நான்கு லட்ச வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட கனகதுர்க்கம்மை