பெங்களூரு: கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டிலுள்ள உற்பத்தி நிலையங்களிலிருந்து திரவ மருத்துவ ஆக்ஸிஜனை இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் வழங்கி வருகிறது.
இதுகுறித்து ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் விஜயநகர் ஆலையின் முதல்வரான ராஜசேகர் பட்டனசெட்டி, “இதுவரை ஏப்ரல் மாதத்தில் கர்நாடகாவில் உள்ள பல்லாரி ஆலையிலிருந்து 11,500 டன்களுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது”.
மேலும், "ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஜே.எஸ்.டபிள்யூ விஜயநகர் ஆலையில் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது ஒரு நாளைக்கு 680 டன் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. கர்நாடகாவிற்கும் பிற மாநிலங்களுக்கும் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது" என்று அவர் கூறினார்.
ஏப்ரல் 2021இல் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் வழங்கிய திரவ மருத்துவ ஆக்ஸிஜனின் மொத்த விநியோகம் அதன் அனைத்து ஆலைகளிலிருந்தும் 20,000 டன்களுக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக மாநில அரசுகள் மற்றும் மருத்துவமனைகளின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் ஏப்ரல் 30 முதல் 1,000 டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை வழங்குவதாக தெரிவித்துள்ளது.