கடந்த 2018ஆம் ஆண்டு, ரிபப்ளிக் தொலைக்காட்சி தனக்குத் தர வேண்டிய பணத்தை திருப்பித் தராத காரணத்தால், தற்கொலை செய்து கொள்வதாக, கட்டட வடிவமைப்பாளர் அன்வே நாயக்கும் அவரது தாயார் குமுத் நாயக்கும் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக அன்வே நாயக்கின் மகள் அத்நயா நாயக் காவல் துறையில் அளித்தப் புகாரின் அடிப்படையில், இந்த வழக்கு மீண்டும் புதிதாக விசாரிக்கப்பட்டது. ஏற்கெனவே, டிஆர்பி முறைகேட்டில் ரிபப்ளிக் தொலைக்காட்சி ஈடுபட்டதாக மும்பை காவல் துறை குற்றம்சாட்டியுள்ள நிலையில், அர்னாப் கோஸ்வாமியை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் மும்பை காவல் துறை நேற்று(நவ.04) அதிரடியாக கைது செய்தது.
கூடுதலாக இவ்வழக்கில் அவரது நண்பர்களான பெரோஸ் ஷேக், நிதீஷ் சர்தா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தப்பட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் இருவர் மீதும் வரும் 18ஆம் தேதி வரை, 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கோஸ்வாமியின் வழக்கறிஞர், அவருக்கு பிணை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அர்னாப் கோஸ்வாமி கைது: தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் மும்பை காவல் துறை அதிரடி!