கொல்கத்தா: கிரிக்கெட்டிலிருந்து அரசியலில் பயணித்து வரும் மனோஜ் திவாரி, மேற்குவங்க மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார். இந்த நிலையில் நேற்று (டிச.11) ஹவுராவில் உள்ள மெய்தன் சட்டசபை மேடையில், அமைச்சர் மனோஜ் திவாரி தொழிலாளர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது பேசிய மனோஜ் திவாரி, "பாரதிய ஜனதா கட்சியில் உள்ளவர்கள், புஷ்பா படத்தில் உள்ள வசனத்தை நன்றாகக் காது கொடுத்துக் கேளுங்கள். நான் உங்களுக்குத் தலைவணங்க மாட்டேன்" என விமர்சித்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
முக்கியமாக பாஜக மேற்குவங்க மாநிலச் செயலாளர் உமேஷ் ராய், "மேற்குவங்க மாநிலம் முழுவதுமே புஷ்பா படம்போல்தான் உள்ளது. மேற்குவங்க இளைஞர்களின் உரிமையை மனோஜ் திவாரி சுரண்டியுள்ளார். அவர்கள் (திரிணாமுல் காங்கிரஸார்) அரிசி திருடர்கள். இவரது பேச்சு புஷ்பா படத்தில் வரும் சந்தன கடத்தல்காரனுக்கு நிகரானவை. இது திரிணாமுல் காங்கிரஸின் உண்மையான தன்மையைக் காண்பித்துள்ளது" என கூறியுள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய மனோஜ் திவாரி, "நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது" என மன்னிப்பு கோரியுள்ளார்.
இதையும் படிங்க: கர்நாடகாவுக்கு ஒளி கொடுத்துவிட்டு இருளில் வாழ்ந்த மக்கள்... சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மின்வசதி...!