டெல்லி: இந்திய விண்வெளி திட்டத்தை உளவு பார்த்து, அது தொடர்பான ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றதாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் உட்பட 6 பேர் மீது குற்றம் சாட்டி, 1994ஆம் ஆண்டு கேரள காவல் துறையினர் அவர்களைக் கைது செய்தது.
பின்னர் இந்த வழக்கு 1996ஆம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதனை விசாரித்த சிபிஐ இந்த வழக்கு பொய்யாக புனையப்பட்டது எனவும், உச்ச நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியது. இந்த வழக்கில் போலீஸார் செய்த அத்துமீறல்களை கண்டறிய உருவாக்கப்பட்ட முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான குழுவும், சிபிஐ-யின் விசாரணை உண்மை எனப் பதிவு செய்து, நம்பி நாராயணன் காவல் துறை தந்த அழுத்தத்தால் உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் நம்பி நாராயணனை துன்புறுத்திய காவல் துறையினர் மீது விசாரணையைத் தொடர வேண்டும் எனக்குறிப்பிட்டது.
நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு
இதையடுத்து நம்பி நாராயணன் இந்த விவகாரத்தில் விடுவிக்கப்பட்டார். இறுதியில் அவருக்கு உச்ச நீதிமன்றம் ரூ.50 லட்சம் கேரள அரசின் சார்பில் இழப்பீடாக வழங்க பரிந்துரைத்தது.
இந்நிலையில் பொய் குற்றச்சாட்டுகளை வைத்து கைது செய்து விசாரித்த காவல் துறை அலுவலர்கள் மீது அண்மையில் சிபிஐ, விசாரணையைத் தொடங்கி, திருவனந்தபுரம் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தது. கூடவே, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி டி.கே.ஜெயின் அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையையும் சமர்ப்பித்து இருந்தது.
இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (ஜூலை 26) விசாரித்தது. அப்போது ஆஜரான மத்திய அரசின் துணை தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, இவ்விவகாரத்தில் காவல் துறை மீது சிபிஐ பதிவு செய்த அறிக்கை உள்ளது என்றார். ஆனால், அது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என உச்ச நீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கூறியது.
முறையான விசாரணை தேவை
இதைத்தொடர்ந்து இணையதளத்தில் இன்றைக்குள் பதிவேற்றிவிடுவதாக துஷார் மேத்தா கூறினார். இதையடுத்து டி.கே. ஜெயின் அறிக்கையை மட்டும், பகிரங்கப்படுத்தக்கூடாது எனவும், முதல் தகவல் அறிக்கையின்படி சட்டப்படி ஆதாரங்களைத் திரட்டி, விசாரணையைத் தொடர வேண்டும் எனவும் கூறியது.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக அப்போதைய கேரள முதலமைச்சர் மறைந்த கே கருணாகரன் காலத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.