ஹைதராபாத்: அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் அன் ஆர்ட்ஸ் நிறுவனம் (ஆஸ்கர் குழுமம்) 2023இன் உறுப்பினராக 398 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அந்த 398 நபர்கள் கொண்ட வரிசையில் 12 பேர் இந்திய சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் பிரபல நடிகர் இயக்குநர் மணிரத்னம், ஜூனியர் என்டிஆர், ராம் சரண், கரண் ஜோஹர், சித்தார்த் ராய் கபூர், ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீராவணி மற்றும் ஆர்ஆர்ஆர் செந்தில் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் வீக்கெண்ட் மற்றும் டெய்லர் ஷிப்ட் ஆகியோர் உடன் இந்திய திரைத் துறையைச் சேர்ந்த 12 நட்சத்திரங்கள் இணைந்து உள்ளனர். அகாடமி நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஜனத் யாங் “அகாடமி குழுமம் புதியதாக 398 உறுப்பினர்களை சேர்ப்பதில் பெருமை கொள்கிறது. இந்த குழுவில் இணைந்துள்ளவர்கள் சினிமாத் துறையில் உலகளாவிய சாதனை புரிந்தவர்கள்.
மேலும், உலக சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்” என கூறினார். சினிமாத் துறையில் திறமை, அர்ப்பணிப்பு, தொழில் முறை திறன்களை அடிப்படையாகக் கொண்டு அகாடமி குழுமத்திற்கு இந்த 398 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இந்த 398 நபர்கள் கொண்ட புதிய குழு சமீப காலங்களில் பாதியாக குறைக்கப்பட்டு தேந்தெடுக்கப்பட்ட குழுவாகும்.
இதையும் படிங்க: Maamannan: பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியானது ‘மாமன்னன்’
தற்போது அகாடமி அவார்ட்ஸ் (ஆஸ்கர்) தேர்வுக் குழுவில் 10 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். அகாடமி குழுவில் 40 சதவீதம் பெண்களும், 52 சதவீதம் பேர் அமெரிக்கா நாடு அல்லாத 50 சிறு நாடுகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அகாடமி குழுவில் உள்ள உறுப்பினர்கள் மட்டுமே ஆஸ்கர் விருது பெறுபவர்களை தீர்மானிக்க முடியும்.
இந்த நிலையில், அடுத்த வருடம் ஆஸ்கர் விருது மார்ச் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் எம்எம் கீராவணியும், தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படமும் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுகளை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நடப்பாண்டில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்விற்கு இயக்குநர் ராஜமெளலி, ஜூனியர் என்டிஆர், ராம் சரண் உள்ளிட்ட ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் சென்றிருந்த நிலையில், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: King of Kotha: "ராஜாவோட வருகைக்காக மக்கள் காத்திருக்காங்க”... வெளியானது கிங் ஆஃப் கோதா படத்தின் மாஸ் டீஸர்!