விசாகப்பட்டினம்: இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்கும் வகையில் நீண்ட தூர இலக்குகளை எளிதாகத் தாக்கும் தன்மை கொண்ட பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தயாரித்துள்ளது. இந்திய கடற்படை போர்க்கப்பல்களின் முக்கிய ஆயுதமான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
நட்பு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனிடையே பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய கடற்படையில் 2015ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்தில் இருந்து ஏவ ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று(பிப்.18) பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது.
வரும் பிப்ரவரி 21ஆம் தேதி 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படை அணிவகுப்பு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் நடைபெறுகிறது. இதில் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் முதல்முறையாக கலந்துகொள்கிறது. இந்த அணிவகுப்பில் 60க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கடற்படை விமானங்கள், துணைக் கப்பல்கள், கடலோர காவல்படை கப்பல்கள் உள்ளிட்டவை பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டார்பிடோ சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி