இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அக்.29ஆம் தேதி இத்தாலி புறப்பட்டுச் சென்றார்.
தொடர்ந்து, நேற்று (அக்.30) தொடங்கி மாநாட்டில் இத்தாலி, அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் கலந்து கெண்டுள்ளனர்.
இதில், 'உலகப் பொருளாதாரம், உலகளாவிய ஆரோக்கியம்' என்ற அமர்வில் முன்னதாக பிரதமர் மோடி பேசினார். அப்போது, "கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளின் கூட்டு முயற்சி அவசியம். இந்தியா 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.
உலக நாடுகளுக்கு உதவ அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இந்தியா தயாராக உள்ளது. இது கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவும். இந்தியா தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்துள்ளது. குறுகிய காலத்தில் 100 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”சர்வதேச பயணங்களை எளிதாக்கும் வகையில் பல்வேறு நாடுகளின் கரோனா தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ஜி20 மாநாடு - பிரதமர் மோடியை வரவேற்ற இத்தாலி பிரதமர்