இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஐநா மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை போர்குற்றம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்த நிலையில், தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ளன. 46ஆவது ஐநா மனித உரிமை மன்றத்தில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை பிரிட்டன், கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்தன.
2014ஆம் ஆண்டுக்கு பிறகு, இரண்டாவது முறையாக இலங்கை அரசுக்கு எதிரான வாக்கெடுப்பில் வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்துள்ளது.
வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பு, இந்தியா வெளியிட்ட அறிக்கையில், "இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது சட்ட திருத்தத்தின்படி, அரசியல் அதிகாரத்தில் பகிர்வு, பிராந்திய கவுன்சில்களுக்கு தேர்தலை நடத்தி அது சுதந்திரமாக நடைபெறுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற சர்வதேச நாடுகளின் கோரிக்கைகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது. ஐநா மனித உரிமை ஆணையத்தின் விதிகள் முறையாக பின்பற்றப்படும் என நம்புகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.