கௌகாத்தி : ஜம்மு-காஷ்மீரில் டிசம்பர் 23ஆம் தேதி பயங்கரவாதிகளுக்கும் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், அஸ்ஸாமைச் சேர்ந்த மிருத்யூன்ஜாய் செட்டியா எனும் சிஆர்பிஎஃப் வீரர் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டினை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதில் காயமடைந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த மூன்று பேர் தொடர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் மிருத்யூன்ஜாய் கடந்த 2017ஆம் ஆண்டு சிஆர்பிஎஃப் படையில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, அவரது உடல் இறுதிச்சடங்கிற்காக அவரது சொந்த ஊரான சிசிபோர்கானுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு மத்திய ரிசர்வ் படைக்காவலர்கள் முழு ராணுவ மரியாதை அளித்து அடக்கம் செய்தனர். தொடர்ந்து, அவரது உடலுக்கு அரசின் சார்பில் தேமாஜி துணை ஆணையர் என். பவார் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில், சிஆர்பிஎஃப் அலுவலர்கள், நூற்றுக்கணக்கான வீரர்கள், உயிரிழந்த வீரரின் குடும்பத்தினர், கிராம மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். உயிரிழந்த மிருத்யூன்ஜாய் செட்டியாவுக்கு அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களது குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதையும் படிங்க: மாவோயிஸ்டுகள் வைத்த ஒன்பது கண்ணி வெடிகள் மீட்பு!