ஹைதராபாத்: வங்கிகளில் கடன் பெறுவது அவ்வளவு எளிதல்ல. பதிவு செய்யப்பட்ட வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற வேண்டுமானால், பல்வேறு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரருக்கு பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் அதற்கேற்ப கடன் வழங்கப்படும். இதனால் கடன் வாங்குவோர், சற்று சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேலையில்லா பட்டதாரிகள், நிரந்தர வருமானம் இல்லாதவர்களை, உடனடி கடன் வழங்கும் செயலிகள் (Instant lenders) தங்கள் வலைக்குள் வீழ்த்துகின்றன.
செயற்கை நெருக்கடி: ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் இளைஞர்களைக் குறிவைக்கும், கடன் வழங்கும் செயலிகள் கவர்ச்சிகர விளம்பரங்களை வெளியிடுகின்றன. குறிப்பாக இந்த செயலிகள் மூலம் கடன் பெறுவதற்கு, வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டியதை போல் பெரிய அளவில் எந்த ஆவணமும் தேவையில்லை. அவ்வளவு ஏன், கடன் பெறுவோரிடம் கையெழுத்து கூட கேட்பதில்லை. கடன் வாங்குவதற்கான செயற்கை நெருக்கடியை ஏற்படுத்தும் இந்த செயலிகள், வாடிக்கையாளர்களை வற்புறுத்தும் வேலையைத்தான் முதலில் செய்கின்றன.உடனடியாக பணம் வேண்டும் என்ற அவசரத்தில் ஏராளமானோர், இதுபோன்ற செயலிகள் மூலம் கடன் வாங்குகின்றனர். ஆனால் இதன் பின்விளைவுகளை பெரும்பாலோர் அறிவதில்லை.
சிக்கலை ஏற்படுத்தும்: மொபைல் செயலிகள் மூலம் சில நிமிடங்களில் கடனை பெற்றாலும், குறிப்பிட்ட நாட்களுக்குள் கடனை செலுத்தாவிட்டால், வாடிக்கையாளர்கள் சந்திக்கும் சிக்கல்கள் ஏராளம் எனக் கூறப்படுகிறது. கடன் செலுத்தாதவர்களை மிரட்டும் நிறுவனம், மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் புகார்கள் குவிகின்றன.
தப்பிப்பது எப்படி?: செயலிகள் மூலம் கடன் வாங்க விரும்புவோர், முதலில் அந்நிறுவனத்துக்கு நிலையான முகவரி உள்ளதா என்பதை உறுதி செய்வது அவசியம். உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆராய வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனம் ரிசர்வ் வங்கியிடம் என்.பி.எஃப்.சி (வங்கி சாரா நிதி நிறுவனம்) உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
ஒருவேளை கடன் வழங்கும் நிறுவனம் ரிசர்வ் வங்கியிடம் உரிமம் பெறாமல் இருப்பது தெரியவந்தால், அந்த நிறுவனத்தை அணுகாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் மோசடி செய்யும் நிறுவனமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.முடிந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தொடர்பு எண் மற்றும் ஆன்லைனில் அந்நிறுவனத்தை பற்றிய விமர்சனங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
ஒருமுறைக்கு இருமுறை...: கடன் வழங்கும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் முன் ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது சிறந்தது. ஏனென்றால் உங்களது அனைத்து தரவுகளையும் பெறும் செயலிகள், அவற்றைத் தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக ஆதார் மற்றும் பான் எண்களைப் பயன்படுத்தி மோசடி செய்யவும் வாய்ப்பிருக்கிறது. உடனடியாக பணம் வேண்டும் என்பதற்காகச் செயலிகளை நாடுவதில் தவறில்லை. ஆனால், அதன் நம்பகத்தன்மையை அறிந்திருப்பது மிகவும் அவசியம்.
இதையும் படிங்க: சென்னை ஏர்போர்ட்டில் விமானங்கள், பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!