புதுச்சேரி: ஒமைக்ரான் பரவி வரும் நிலையில், புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரி, கரிக்காலம்பாக்கம் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகன்நாதன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் டி. பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஞானசேகர், ஸ்ரீதர் ஆகியோர் தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதுச்சேரியில் குவிந்து வருகின்றனர். இதனால், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
மதுபான விற்பனையைத் தடை செய்யக்கூடாது:
புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மாலா, தடுப்பூசி போட்டிருந்தால் தான் விடுதியில் தங்க முடியும், கரோனா தடுப்பு விதிகள் பின்பற்ற வேண்டும், விடுதிகளில் 50 விழுக்காடு நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, சென்னையில் கொண்டாட்டங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, பொருளாதார நிலையை மட்டுமல்லாமல் பொதுமக்களின் உயிரையும் கருத்தில் கொள்ள வேண்டாமா? கரோனா மெல்லத்தான் தொடங்கும். ஆனால் பாதிப்புகள் அதிகமாகும் எனவும், சில நாட்களுக்கு மதுபான விற்பனையையாவது தடை செய்தால் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மதுவால் வரும் வருவாய் முக்கியம்
இதற்குப் பதிலளித்த புதுச்சேரி அரசு வழக்கறிஞர், கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்த மாநிலங்களில் கூட, மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கவில்லை எனவும், மாநில அரசின் வருவாயைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பொது இடங்களில் மதுபானங்கள் அருந்த அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும்; இதை கண்காணிக்க சிறப்புப் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கரோனா பாதிப்பில் மாநிலத்தின் நிலை மோசமாக இல்லை என்று கூறிய அவர், அந்தந்த மாநிலங்களின் நிலையின் அடிப்படையில் முடிவெடுக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும், மக்கள் நலனில் எந்த சமரசமும் செய்து கொள்ளப் போவதில்லை எனவும் கூறினார்.
இரண்டு நாள் மதுவருமானம் தான், அரசு ஊழியர்களின் சம்பளம்
மக்களின் நிலை, பொருளாதார சூழ்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இந்த இரண்டு நாட்கள் மதுபான விற்பனை வருமானம் தான் அரசு ஊழியர்களின் அடுத்த இரண்டு மாதங்களுக்கான ஊதியம் எனவும் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மேற்கொள்ளலாம் எனவும் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை ஒரு மணி வரையிலான மூன்று மணி நேரத்துக்கு மாநிலத்தில் மதுபானங்கள் விற்கக் கூடாது என தடை விதித்தனர்.
மேலும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை, பொது இடங்களில் அனுமதிக்கக் கூடாது என்றும், அலுவலர்கள்,காவல் துறையினர் தடுப்பூசி சான்று கேட்டால் காண்பிக்க வேண்டும் என்றும், பிரபலங்கள் பொது இடங்களில் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:Spiritual trainer Annapoorani: 'நான் சாமியே இல்லை' - திடீர் ட்விஸ்ட் அடித்த அன்னபூரணி