ஜிந்த் : ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 3 விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானாவில் சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் எச்சரித்துள்ளன.
ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உழவர் சங்கத் தலைவர் பிஜேந்திர சிந்து (Bijendra Sindhu) ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஆகஸ்ட் 15ஆம் தேதி மாவட்டம் தழுவிய டிராக்டர் பேரணி நடத்தப்படும்.
அப்போது, டிராக்டரின் ஒருபுறம் தேசியக் கொடியும் மறுமுனையில் விவசாயக் கொடியும் கட்டப்படும். எங்கள் போராட்டத்தை பாஜகவினர் தடுக்க நினைத்தால் நாங்கள் பதிலடி கொடுக்க மாட்டோம்.
அவர்களை வெளியேறுங்கள் என்று வற்புறுத்த மாட்டோம், மாறாக கறுப்புக் கொடி காட்டுவோம். எங்கள் போராட்டம் உறுதியாக நடைபெறும்” என்றார். ஆக விவசாயிகள் சுதந்திர தினத்திலும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
முன்னதாக ஜனவரி மாதம் குடியரசுத் தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினார்கள். அப்போது விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : ஒரேநாளில் எட்டு மசோதாக்களை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!