அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 10) ரூ. 3,050 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அந்த வகையில், நவ்சாரி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, "கடந்த 20 ஆண்டுகளில், குஜராத் மாநிலம் கிராமப்புறம் முதல் நகர்ப்புறம் வரை சுகாதார உள்கட்டமைப்பில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிராமப்புறங்களில் 1,000-க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.
நகர்ப்புறங்களில் 600 தீன் தயாள் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. குஜராத்தின் அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான உயர் சிகிச்சை உபகரணங்களும் வசதிகளும் உள்ளன. அகமதாபாத்தில் உள்ள கிட்னி இன்ஸ்டிடியூட் அதி நவீனமயமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.
இங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை வசதிகளை நவீனப்படுத்த உள்ளோம். நாட்டில் ஏழை, நடுத்தர மக்களை நோயிலிருந்து காப்பாற்றுவதும், சிகிச்சைச் செலவைக் குறைப்பதுமே எங்களது குறிக்கோள். குறிப்பாக குழந்தைகள், தாய்மார்களின் ஆரோக்கியத்தை பாதுக்காக்க தொடர்ந்து முயற்சிகள் எடுப்போம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பழங்குடியின மக்கள் வளர்ச்சியில் காங்கிரஸ் ஆர்வம் காட்டவில்லை