காந்திநகர்: மாநிலத்தின் முக்கியமான நான்கு நகரங்களில் ஊரடங்கு நேரத்தை இரண்டு மணி நேரம் அதிகரிக்க செவ்வாய்க்கிழமை (மார்ச் 16) மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணிவரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நேரத்தை இரவு 10 மணி முதல் கடைப்பிடிக்க மாநில அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இந்தத் தகவலை மாவட்ட நிர்வாகத்தினருடன் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் ரூபானி கூறினார்.
இந்தக் கட்டுப்பாடுகள் மார்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும். புதிய கட்டுப்பாடுகள் நாளை (மார்ச் 17) முதல் அமலுக்கு வருகின்றன. குஜராத்தில் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் அங்கு அதிகரித்துவரும் கரோனா பாதிப்புகள் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. குஜராத்தில் கரோனா வைரஸால் இரண்டு லட்சத்து 79 ஆயிரத்து 97 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்திலிருந்து தினந்தோறும் 200 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
அதிகபட்சமாக சூரத்தில் பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அடுத்த இடங்களில் அகமதாபாத், வதோதரா மற்றும் ராஜ்கோட் உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளன.
இதையும் படிங்க: பினராயி விஜயனை எதிர்த்து தேர்தல் மன்னன் போட்டி!