புதுச்சேரி: சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, சுற்றுலாத்துறை சார்பில் சன்வே மேனார் விடுதியில் நடைபெற்ற சுற்றுலாத் தொழில்முனைவோர் சந்திப்பினை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (டிச.4) தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். சுற்றுலாத் தொழில்முனைவோர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையாற்றினார்.
அந்த உரை,
- புதுச்சேரியில் சுற்றுலாத்துறை மேம்படுத்துவதற்கான பல நல்ல திட்டங்களைத் தீட்டி இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி கூறியது போலத் தீவிரவாதத்தைக் கூட சுற்றுலாவால் முறியடிக்க முடியும்.
- புதுச்சேரியில் இயற்கை வளம் நிறைந்திருக்கிறது. அதில் முதலீடு செய்து சுற்றுலாவை மேம்படுத்த முடியும். கடற்கரை, இயற்கை வளம், மீன்வளம் ஆகியவை கொண்ட புதுச்சேரியில் ஆன்மிக சுற்றுலா, இயற்கை சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்த முடியும்.
- புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரிகள் அதிகமாக எண்ணிக்கையில் இருக்கிறது. அதனால் மருத்துவச் சுற்றுலாவைச் சிறப்பாக மேம்படுத்த முடியும். கரோனாவுக்கு பிந்திய நாட்களில் சுற்றுலாவை மேம்படுத்துவது பற்றி உலகளவில் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி எல்லோருக்குமான சுற்றுலாத்தலமாக அமைய வேண்டும்.
- பத்மஸ்ரீ விருது பெற்ற சுடுமண் சிற்பக் கலைஞர் முனுசாமி புதுச்சேரிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். சுடுமண் சிற்பக் கலையை மேம்படுத்தும் வகையில் கலாச்சார மையம் அமைய வேண்டும். சுடுமண் சிற்பங்களை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்.
- புதுச்சேரியில் திரைப்பட நகரம் அமைய வேண்டும். திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்கும் வகையில் திரைப்பட நகரம் அமைப்பது புதுச்சேரிக்கு வருவாயை ஈட்டித்தரும்.
- சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அமைக்கப்பட்ட வானுயர "ஒற்றுமைச் சிலை" விமர்சனங்களைத் தாண்டி இன்று மிகப்பெரிய சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது. அதைப்போல புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் மகாகவி பாரதிக்கு ஒரு வானுயர சிலை அமைக்க வேண்டும். அப்போது மிகப்பெரிய சுற்றுலாத் தலமாகப் புதுச்சேரி மாறும். அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு சுற்றுலா மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிறப்பான சுற்றுலா கொள்கை உருவாக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் மாநிலமாக, சுற்றுலாப் பயணிகள் விரும்பத்தக்க நகரமாக புதுச்சேரி அமைய வேண்டும்.
- தொழில் முனைவோருக்கு வரவேற்கத்தக்க தொழிற்கொள்கை வகுக்க வேண்டும். ஒற்றைச் சாளர முறையை அறிமுகப்படுத்த வேண்டும். முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், அலுவலர்கள் இணைந்து ஒரு கூட்டு முயற்சியோடு செயல்பட வேண்டும். திட்டங்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த வேண்டும்.
- அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
என்று குறிப்பிட்டார்.