ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் சேவையாற்றும் வகையில் இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.
இதையடுத்து, அக்னிபாத் திட்டத்தில் சேர்வதற்கான வயது வரம்பு 21-லிருந்து 23ஆக உயர்த்தப்பட்டது. ஆனால், அக்னிபாத் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்தில் சேர்வதற்கான வயது வரம்பை அதிகரிக்க ஒப்புதல் அளித்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, "கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணுவத்தில் ஆள்சேர்ப்பு பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், அக்னிபாத் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு, அக்னிபாத் திட்டத்தில் சேர்வதற்கான வயது வரம்பை 23ஆக உயர்த்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏராளமான இளைஞர்கள் பயனடைவார்கள். இத்திட்டத்தின் மூலம், நாட்டின் எதிர்காலமும், நாட்டு இளைஞர்களின் எதிர்காலமும் முன்னேற்றமடையும். வயது வரம்பை அதிகரித்தற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அக்னிபாத் திட்டத்திற்கு டிசம்பர் முதல் பயிற்சி ஆரம்பம்- ராணுவ ஜெனரல் மனோஜ் பாண்டே