கோர்பா: வரும் மக்களவை தேர்தலுக்கு முன் நக்சலிசம் ஒழிக்கப்படும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 7) நடந்த பாஜக பொதுகூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர், நாடு முழுவதும் நக்சலிசத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை மீட்டுவருகிறோம். 2009ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின் போது நாடு முழுவதும் 2,258 நக்சல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், 2021ஆம் ஆண்டில் பாஜக ஆட்சியின்போது நக்சல் வன்முறைகள் 509ஆக குறைந்துள்ளது. 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் நக்சலிசம் ஒழிக்கப்படும். அதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டுவருகிறது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் குற்றங்களும், ஊழல்களும் மட்டுமே முன்னேற்றமடைந்தன. சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஆதரவு அளிப்பதுபோல் பேசிவருகிறது. ஆனால், அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. பாஜக கட்சி பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உருவாக்கி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியலமைப்பு உரிமைகளை வழங்கியது.
அவர்களுக்கு நீட் தேர்வில் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. நவோதயா வித்யாலயா, கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளிகளில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஊழலைத் தவிர வேறு எந்தப் பணியையும் செய்யவில்லை.
பழங்குடியின சமூகத்திற்கு நீங்களும் உங்கள் கட்சியும் என்ன செய்தீர்கள் என்று முதலமைச்சர் பூபேஷ் பாகேலிடம் கேட்க விரும்புகிறேன்?. பல ஆண்டுகளாக ஆட்சியில் இருத்தும், ஒரு பழங்குடி சகோதரனையோ சகோதரியையோ குடியரசுத் தலைவராக்கவில்லை. ஆனால், பாஜகவின் நரேந்திர மோடி பழங்குடியின திரௌபதி முர்முவை மாண்புமிகு திரௌபதி முர்முவாக மாற்றினார் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பீகாரில் சாதி வாரி கணக்கெடுப்பு தொடக்கம்