டெல்லி: கரோனா வைரஸில் பி.1.617 என்ற வகை வைரஸ் வேகமாகப் பரவுவது, உலக அளவில் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ‘இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்’ என்ற வார்த்தையை குறிப்பிடவில்லை.
இருப்பினும் தற்போது சமூக வலைதளங்களில் ‘இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு அதிகமாக பதிவுகள் தென்படுகின்றன. இச்சூழலில், மத்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சமூக வலைதள நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில், ‘இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்’ என்று பெயர்கள், குறிப்புகள் அல்லது அவ்வாறு குறிக்கும் அனைத்து உள்ளடக்கங்கள் அடங்கிய அனைத்து வார்த்தைகளையும் உடனடியாக தங்களின் தளங்கள், செயலிகளில் இருந்து நீக்க வேண்டும். இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் என்ற வார்த்தை முற்றிலும் தவறானது.
இது நாட்டின் மரியாதைக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக உள்ளது. இதுபோன்ற வார்த்தையை உலக சுகாதார அமைப்பே எந்த ஒரு அறிக்கையிலும் ஒருபோதும் பயன்படுத்தவில்லை. பிரிட்டன், பிரேசில், தென்னாப்பிரிக்கா நாடுகளில் முதன்முதலில் கண்டறியப்பட்ட பின்னர் கண்டறியப்பட்ட நான்காவது மாறுபாடுதான் உருமாறிய கரோனா வைரஸ் பி.1.617 எனும் வைரஸ் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது” என தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறியுள்ளது.