இந்தியாவில் கார், இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம். சிறு வயதிலேயே இருசக்கர வாகனம் ஓட்டுவதற்குப் பலர் நன்றாகப் பழகிக்கொண்டாலும், 18 வயதை எட்டினால் மட்டுமே வாகன ஓட்டுநருக்கான உரிமத்தை அவர்களால் பெற முடியும்.
என்னதான் பெரிய ரைடராக இருந்தாலும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்டிஓ முன்பு வாகனத்தை ஓட்டி காண்பித்தால் மட்டுமே உரிமம் கிடைத்திடும். தற்போது, இந்த நடைமுறையை மாற்றியமைத்து ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுநர் பயிற்சியை முடித்தவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தனியாகச் சோதனையில் பங்கேற்க வேண்டிய அவசியம் கிடையாது.
இந்தப் புதிய நடைமுறை ஜூலை 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன பயிற்சி பள்ளிகள், வாகனம் ஓட்ட கற்க வருபவர்களுக்குப் போக்குவரத்து குறியீடுகள், போக்குவரத்து விதிமுறைகள், வாகன கட்டமைப்பு, பொதுத் தொடர்பு, முதலுதவி உள்ளிட்டவை குறித்த வகுப்புகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
சரியான புரிதலின்றி சாலையில் வாகனத்தை ஓட்டுபவர்களால் வாகன விபத்து ஏற்படுவதைக் கருத்தில்கொண்டு, புதிய உத்தரவு கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.