சென்னை: நாட்டையே உலுக்கிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 6 பாதுகாப்பு படையினர், 2 நாடாளுமன்ற வளாக பாதுகாவலர்கள் மற்றும் தோட்டப் பணியாளர் என 9 பேர் மரணம் அடைந்தனர். இச்சம்பவம் நமது நாட்டின் நீங்கா நினைவுகளுள் ஒன்றாகத் திகழ்கிறது.
இச்சம்பவம் குறித்து அப்போதைய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி, "நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதல், பாகிஸ்தானை மையமாகக் கொண்டு, பாகிஸ்தானின் உதவியில் இயங்கும் லக்ஷர் ஏ தைய்யிபா, ஜாய்ஷ் ஏ முகம்மது அமைப்பைச் சார்ந்தவர்கள் என்பது தெளிவாகியுள்ளது" என்று மக்களவையில் பேசினார்.
அந்நாளில் நடந்தது என்ன? 2001ஆம் ஆண்டு, டிசம்பர் 13ஆம் தேதி காலை சுமார் 11.30 மணி அளவில், நாடாளுமன்ற வளாகத்திற்குள் போலியான அடையாள அட்டைகளைக் காட்டி, வெள்ளை நிற அம்பாசிடர் காரில், 5 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் பலத்த ஆயுதங்களுடன் நுழைந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த பயங்கரவாத தாக்குல் நடைபெற்ற தினத்தன்று, நாடாளுமன்ற கூட்டம் நிறைவுபெற்று சுமார் 40 நிமிடங்கள் கடந்திருந்தது. அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் எதிர்கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றிருந்த நிலையில், எல்.கே.அத்வானி உள்பட 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தனர்.
அத்துமீறி உள்ளே நுழைந்த பயங்கரவாதிகளின் வாகனம், அப்போதைய துணை குடியரசுத் தலைவர் கிருஷ்ணன் காந்த்-இன் பாதுகாப்பு வாகனத்தில் மோதி முதல் தாக்குதல்களைத் துவங்கினர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளிடம் ஐந்து AK-47 ரக துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் இருந்தது தெரிய வந்துள்ளது. பின்னர் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற மோதலில் 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
அதனை அடுத்து, உள்ளே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என அனைவரும் காயங்கள் இன்றி மீட்கப்பட்டனர். நாட்டில் நடந்த மற்ற பயங்கரவாத தாக்குதல்களை விட உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், நாடாளுமன்ற வளாகத்திலேயே நடைபெற்ற தாக்குதலால், நாட்டின் ஜனநாயகத்தை அதிர்வடையச் செய்ததாக மக்கள் கருத்து தெரிவித்தனர்.
அந்த தாக்குதல் சம்பவம், நாடாளுமன்ற வளாகத்தில் போதிய பாதுகாப்பு குறைவாக இருந்ததாகக் கருதிய அரசாங்கம், பாதுகாப்பு பணிகளை பலப்படுத்தியதோடு, தாக்குதல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தது. விசாரணையில் அஃப்ஸல் குரு, எஸ்.ஏ.ஆர்.ஜீலானி, ஷௌகத் ஹுசைன், நவ்ஜோத் சந்து ஆகியோருக்கும், தாக்குதல் நடத்திய கும்பலுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
தாக்குதலுக்கு பிறகு நடந்தவை: நாடாளுமன்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைக்காக, டெல்லி காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வகையில், ஜே.கே.எல்.எஃப் அமைப்பில் இருந்த அஃப்ஸல் குரு, அவரது சகோதரர் ஷௌகத் ஹுசைன், ஷௌகத் ஹுசைனின் மனைவி அஃப்சான் ஹுசைன் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தில் அரபி மொழி பேராசிரியராக இருந்த எஸ்.ஏ.ஆர்.ஜீலானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு அடுத்தடுத்து நடைபெற்ற விசாரணையில், ஷௌகத் ஹுசைனின் மனைவி அஃப்சான் விடுவிக்கப்பட்டார். மேலும், பேராசிரியர் ஜீலானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 2005ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர், கடந்த 2013ஆம் ஆண்டு அஃப்ஸல் குருவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் தலைநகர் டெல்லி மட்டுமின்றி, உலக அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. குறிப்பாக இச்சம்பவம் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் சூழலை தீவிரப்படுத்தியது. எந்த அளவிற்கு என்றால், பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் சுமார் 5 லட்சம் இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் கிடைத்திருந்தன.
மேலும், அந்நாட்டில் இருந்த இந்தியாவின் தூதரக அதிகாரிகளை திரும்ப வரக்கூறி, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பயணிகள் விமான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது. அச்சூழலில் அப்போதைய அமெரிக்க பிரதமர் ஜார்ஜ் புஷ், இந்த விவகாரத்தில் தீர்வு காண வேண்டி இரு நாட்டுத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டார்.
அதன் பின்னர், பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரப், இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பர்வேஸ் முஷாரப், ஜாய்ஷ் ஏ முகம்மது மற்றும் லக்ஷர் ஏ தைய்யிபா போன்ற அமைப்புகளுக்கு தடை விதித்து தீர்க்கமான முடிவு எடுத்தார்.
யார் இந்த பாதுகாப்பு படைவீரர் சந்தோஷ் குமார்? சந்தோஷ் குமார், 2001ஆம் டிசம்பர் 13ஆம் தேதி நடந்த தாக்குதலின்போது 5 பயங்கரவாதிகளில் 3 பேரை சுட்டுக் கொன்றவர். தன் தந்தையை பின்பற்றும் வகையில் மத்திய காவல் படையில் சேர்ந்திருந்த இவர், தான் பணி தொடங்கிய ஆறு மாத காலங்களிலேயே இந்த தாக்குதல் சம்பவத்தைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 13, நாடாளுமன்றத் தாக்குதல், நமது நாட்டின் வரலாற்றின் மிகவும் சோகமான நாட்களுள் ஒன்றாக எழுதப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 22வது நினைவு நாளில், அந்த தாக்குதலின் போது அவர்களின் உயிரை தியாகம் செய்த பாதுகாப்பு படைவீரர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒட்டுமொத்த தேசமும் வணங்கி நினைவு கூறுகிறது.
இதையும் படிங்க: மக்களவையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்; குதித்தோடிய பார்வையாளர்களால் பரபரப்பு!