மண்டி (இமாச்சலப் பிரதேசம்): காங்கிரஸ் கட்சியின் மூத்தக் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பண்டிட் சுக் ராம், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. முன்னதாக, சுக் ராம் மே 9 தேதியன்று பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் புதன்கிழமை (மே11) காலமானார். அவரது உடல் டெல்லியில் இருந்து மண்டிக்கு கொண்டு வரப்படுகிறது. வியாழக்கிழமை காலை 11 மணியளவில், அவரது உடல் மண்டியின் வரலாற்று செரி மஞ்சில் வைக்கப்படும், அங்கு மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவார்கள். அதன்பிறகு, அரசு மரியாதையுடன் ஹனுமான் காட்டில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
சுக் ராம், 1993 முதல் 1996 வரை மத்திய, தகவல் தொடர்பு அமைச்சராக இருந்தார். இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக இருந்தார். அவர் ஐந்து முறை விதான்சபா (சட்டப்பேரவை) தேர்தலிலும், மூன்று முறை லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்றார். 1996இல் தகவல் தொடர்பு அமைச்சராக இருந்தபோது, ஊழல் குற்றச்சாட்டில், 2011ல், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சுக் ராமின் மகன் அனில் சர்மா மண்டியின் பாஜக எம்எல்ஏ., ஆவார். சுக் ராம் ஹிமாச்சல பிரதேசத்தில் கால்நடை பராமரிப்பு அமைச்சராக இருந்தபோது, ஜெர்மனியில் இருந்து பசுக்களை கொண்டு வந்தார். இது மாநில விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வழிவகுத்தது. அவர் 1984 இல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் ராஜீவ் காந்தி அரசில் இளைய அமைச்சராகப் பணியாற்றினார்.
சுக் ராம், பாதுகாப்பு உற்பத்தி மற்றும் விநியோகம், திட்டமிடல் மற்றும் உணவு மற்றும் சிவில் சப்ளைகளுக்கான இணை அமைச்சராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, சுக் ராம் 1993 முதல் 1996 வரை தகவல் தொடர்பு இலாகாவை கவனித்துவந்தார். இந்த நிலையில் அவரது மகன் அனில் சர்மா 1993இல் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காங்கிரஸில் இருந்து விலகுகிறார் ஹர்திக் பட்டேல்?