டெல்லி: இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு சென்ற அக்-14ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் 528.367 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்துள்ளது. இது முந்தைய வாரத்தை விட 4.5 பில்லியன் டாலர் சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முந்தைய வாரத்தில் சென்ற அக்-7 வரை நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 532.868 பில்லியன் டாலராக இருந்ததாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி இந்தியாவின் வெளிநாட்டு நாணய சொத்துகள், அந்நிய செலாவணி முடிவடைந்த வாரத்தில் 2.828 பில்லியன் டாலர் குறைந்து 468.668 பில்லியன் டாலர்களாக உள்ளது. வார முடிவில் தங்கத்தின் கையிருப்பு மதிப்பு 1.5 பில்லியன் டாலர் குறைந்து 37.453 பில்லியன் டாலராக உள்ளது.
மதிப்பாய்வுக்கு உட்பட்ட வாரத்தில், சர்வதேச நாணய நிதியத்துடனான இந்தியாவின் சிறப்பு வரைதல் உரிமைகளின் (SDRs) மதிப்பு 149 மில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்து 17.433 பில்லியன் டாலராக உள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிந்து வரும் நிலையில் ரூபாய் மதிப்பைப் பாதுகாக்க சந்தையில் ரிசர்வ் வங்கியின் தலையீட்டின் காரணமாக, கையிருப்பு பல மாதங்களாக சரிந்து வருகிறது.
இதற்கிடையில் கடந்த அக்-19அன்று முதல்முறையாக அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாய் மதிப்பு 83-ஐ தாண்டியது. இந்த ஆண்டு இதுவரை, ரூபாயின் மதிப்பு 11-12 விழுக்காடு வரை ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் சரிவு...