ஜலான்: உத்தரப்பிரதேசத்தில் திருமண கோஷ்டி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் திருமண விழாவில் கலந்து கொள்ள பேருந்தில் பயணித்து உள்ளனர். கோபலபுரா அடுத்த பிந்த் - உரய் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அதிவேகமாகப் பேருந்து சென்றதாக கூறப்படுகிறது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடத் தொடங்கி உள்ளது.
திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஓடத் தொடங்கியதைக் கண்டு அதிர்ந்து போன பயணிகள், கத்தி கூச்சல் போட்டு உள்ளனர். தாறுமாறாக ஓடிய பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்துக்குள்ளானது. பேருந்து கவிழ்ந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பினர். ஏறத்தாழ 40 பேர் பேருந்தில் பயணித்த நிலையில் விபத்தில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : Karnataka Election: பெங்களூரு நிறுவனர் கெம்பெ கவுடாவுக்கு பிரதமர் மோடி மரியாதை!
12 பேர் தீவிரக் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் அச்சம் நிலவுவதாக அதிகாரிகள் கூறினர். 15 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்தில் பேருந்தின் கூடாரம் ஒட்டுமொத்தமாக சேதமடைந்ததாகவும்; அந்த அளவுக்குப் பேருந்து அதிவேகமாக சென்றதாகவும் போலீசார் கூறினர்.
நள்ளிரவு 2 மணி அளவில் விபத்து நேர்ந்ததாக கூறிய போலீசார், பேருந்தில் பயணித்த 40 பேரும் மாவாய் கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து விட்டு சொந்த ஊர் திரும்பியபோது விபத்தில் சிக்கிக் கொண்டதாகக் கூறினர். பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஜலான் மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அறிந்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மிகுந்த வேதனை அடைந்ததாகவும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.
மேலும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட இடத்தில் விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை அறியவும் மேற்கொண்டு விபத்துகள் ஏற்படாமல் இருக்க மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : பஞ்சாப் பொற்கோயில் அருகே பெரிய கண்ணாடி வெடித்து சிதறியதால் பரபரப்பு!