டெல்லி: ஜெர்மனியின் முன்ச் நகரில் இருந்து பாங்காக் நோக்கி செல்லும் வழியில் லூஃப்தான்சா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்றில் பயணித்த கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக விமானம் பாதியிலேயே தரை இறக்கப்பட்டது.
ஜெர்மனியின் முன்ச் நகரில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நோக்கி லூஃப்தான்சா ஏர்லைன்ஸ் சென்று கொண்டிருந்தது. செல்லும் வழியில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது சண்டையாக மாறியதாக கூறப்படுகிறது.
இந்த சண்டையால் விமானத்துக்குள் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் பயணித்த மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதையடுத்து விமானத்தை திருப்பிவிட முடிவெடுக்கப்பட்டது. முதலில் பாகிஸ்தானில் தரையிறக்க அனுமதி கேட்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. இளம்பெண் அளித்த புகாரில் ஒருவர் கைது!
இதன் பின் விமானம் அவசரமாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது. பின் விமானத்தில் பயணித்த பிரச்னைக்கு காரணமாக இருந்த ஜெர்மனை சேர்ந்த ஆண் பயணி பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இது குறித்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில்,“எதனால் சண்டை ஏற்பட்டதென்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் சண்டை காரணமாகவே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது” என கூறினார். இதனையடுத்து சிறு கால தாமதத்திற்கு பின் மீண்டும் விமானம் பாங்காக் நோக்கி புறப்பட்டது.