மத்தியபிரதேசம்: இந்தியாவில் அழிந்துவிட்ட விலங்கினமான சிவிங்கிப் புலிகளை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்து இனப்பெருக்கம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, தென் ஆப்பிரிக்க நாடான நமீபியாவிலிருந்து எட்டு சிவிங்கிப் புலிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. இந்த புலிகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் திறந்துவிடப்பட்டன. பிரதமர் மோடி தனது பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 17ஆம் தேதி புலிகளை பூங்காவில் திறந்துவிட்டார்.
இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கிப் புலிகள் விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த புலிகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சாஷா என்ற பெண் சிவிங்கிப் புலி, கடந்த மார்ச் மாதம் சிறுநீரகக் கோளாறு காரணமாக உயிரிழந்தது. அதேபோல், தென் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட உதய் என்ற சிவிங்கிப்புலி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தது.
இந்த நிலையில், நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆஷா என்ற பெண் சிவிங்கிப்புலி, இன்று(ஏப்.27) குனோ தேசிய பூங்காவிலிருந்து தப்பியோடிவிட்டது. குனோ தேசிய பூங்காவிலிருந்து தப்பித்து வனப்பகுதி வழியாக ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சிவிங்கிப்புலியின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள காலர் ஐடி மூலம் அதன் இருப்பிடத்தை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனந்த்பூர் மற்றும் காசிகர் இடையே உள்ள வயலில் ஆஷா ஒளிந்திருப்பதாகத் தெரிகிறது. சிவிங்கப்புலி ஆஷா ஏற்கனவே கடந்த 5ஆம் தேதி, குனோ தேசிய பூங்காவிலிருந்து தப்பியோடியது. இரண்டு நாட்களுக்குப் பிறகு தானே பூங்காவுக்கு திரும்பி வந்தது.
இதேபோல், கடந்த வாரம் பவன் என்ற ஆண் சிவிங்கிப்புலி குனோ தேசிய பூங்காவிலிருந்து வழிதவறிச் சென்றுவிட்டது. பின்னர், அதனை உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியிலிருந்து மீட்டனர்.
இதையும் படிங்க: Cheetah : குனோ தேசிய பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கி புலி உயிரிழப்பு - என்ன காரணம்?