சென்னை: ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்களித்தபோது, தற்போதைய ஆட்சியே தொடர்வதை விட மாற்றம் தேவை என்று தமிழ்நாட்டின் வாக்காளர்கள் விரும்பினார்கள். அந்த மாற்றமே தற்போது நடக்க உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான திராவிட முனேற்றக் கழகம் அடுத்த அரசை அமைக்கத் தயாராக உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் ஊடகமான ஈடிவி பாரத், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு - வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. இதன்படி, 2016 தேர்தலில் தோல்வியடைந்த திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்று, அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமையும் என்று தெரிய வந்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜகவின் ஆதரவால் மட்டுமே அதிமுக கோஷ்டிகளை இதுவரை ஒன்றாக வைத்திருந்த சாதனையைச் செய்த, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆட்சிக்கு இத்தேர்தல் அஸ்தமனமாகவே அமையும்.மேற்கு மண்டலம் மட்டும் அதிமுகவின் கோட்டையாக எஞ்சியிருப்பதால், ஆளும் கட்சி 90 இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், திமுக தலைவருக்கு வெற்றிக் கனி தொலைவில் இல்லை என்றே தெரிகிறது. தேர்தலுக்கு முன்பு கணிக்கப் பட்டிருந்ததைவிடவும் மிகச் சுலபமாக - ஆட்சியமைப்பதற்குத் தேவையான பாதி இடங்களை திமுக தாண்டிவிட்டது என்பது தற்போதைய கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.
வெற்றியைத் தந்த பிரச்சாரம்
‘ஆளும் கட்சி எதிர்ப்பு’களையும், ‘மோடி எதிர்ப்பு அலை’யையும் தங்களுக்கு சாதகமாக்கி - திமுக செய்த பரப்புரை, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை, இத்தேர்தலில் வெற்றிகரமாக உருவெடுக்க வைத்துள்ளது. அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்பார். ஏனெனில், திமுக கூட்டணி - மொத்தமுள்ள 234 இடங்களில், 133 இடங்களில் வென்று அறுதிப் பெரும்பான்மையைப் பெரும் என்று தெரிகிறது.
வெற்றிக்கு வழிவகுத்த கூட்டணி - பெரும்பான்மையைப் பெறும் திமுக
பெரும்பாலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளோடு மாறுபடுகின்ற போதிலும், திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சபையில் பெரும்பான்மைக்குத் தேவையான பாதி இடங்களைத் தாண்டி விட்டனர். காங்கிரஸ், இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, முஸ்லீம் கட்சிகள் மற்றும் சில கட்சிகளை உள்ளடக்கிய திமுக கூட்டணி சரிவையே சந்திக்கும் என்று வல்லுநர்கள் கணித்திருந்தனர். கூட்டணிக் கணக்கைக் கருத்தில் கொண்டால், பா.ஜ.க.வுடன் இணைந்திருப்பதை ஒரு பலமாகக் கருதிய அதிமுகவை விட சிறந்த நிலையில் திமுக உள்ளது.
தலைவராக நிரூபித்துள்ள ஸ்டாலின்
கரோனா பெருந்தொற்றுப் பிரச்னைக்கு இடையே நடத்தப்பட்ட தேர்தல் என்பதோடு மட்டுமின்றி, இரு பெரும் கட்சிகளின் முக்கியத் தலைவர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத நிலையில் இத்தேர்தல் நடைபெற்றிருக்கிறது. ஆனாலும்கூட, ஸ்டாலின் தனது சொந்த கட்சியின் செல்வாக்கில் ஒரு தலைவராக உருவெடுத்து வருகிறார் என்பதற்கு ஆதாரமாக - இந்த சட்டப்பேரவைத் தேர்தல் அமைந்துள்ளது. பரப்புரைக்கு ஒற்றை ஆளாக தலைமையேற்று நடத்தி, 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்பு அவர், தனது கட்சியின் வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். 2016 சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவின் பிரச்சாரத்தை அவரே தலைமையேற்று நடத்தினார்.
சென்னை எப்போதும் திமுகவின் கோட்டை
55.28% என்ற குறைந்த வாக்குப்பதிவைக் கொண்டிருந்தாலும், பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றுவதன் மூலம் சென்னை திமுகவின் கோட்டை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருசில இடங்களைத் தவிர சென்னை எப்போதுமே திமுகவின் வலிமையான கோட்டையாகவே இருந்து வருகிறது.
தொடரும் திமுகவின் வெற்றிப் பயணம்
மாநிலத்தில் 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளன, இதில் அதிகபட்சமாக கரூரில் 83.92% வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் 38 இடங்களை திமுக கூட்டணி பிடித்தது, அதிமுக ஒரேயொரு இடத்தை மட்டுமே பிடித்தது. பாஜக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை, அதே நிலையே இந்தத் தேர்தலிலும் தொடர்கிறது.
எடப்பாடியின் எதிர்காலம்?
அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு வாக்களிக்கப்பட்டிருப்பது, ஆளும் அதிமுக அரசு தொடர்வதை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது. கட்சி 89 இடங்களைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், ‘அதிகார இழப்பு’ என்பது கட்சி மற்றும் ஈ.பி.எஸ்.இன் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. அதிமுகவின் சிறப்பம்சம் என்னவென்றால், அது எப்படியோ மேற்கு மண்டலமான கொங்கு மண்டலத்தில் தனது பிடியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளதுதான். ஆனால், அதிமுகவின் துயரம் என்னவென்றால், முதலமைச்சரையும் சேர்த்து கட்சியின் பல அமைச்சர்களும் ஊழல் வழக்குகளை எதிர்கொள்வதுதான். ஈ.பி.எஸ் மற்றும் அவரது அமைச்சர்களுக்கு எதிராக திமுக சமர்ப்பித்த ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டப்படி அணுகி, அடுத்த அரசு - அந்த வழக்குகளுக்குத் தீர்வு காணுமா?
வெற்றிக் கணக்கைத் தொடங்கும் கமல்
நமது கருத்துக்கணிப்பின் படி, ஆளும் அதிமுக 89 இடங்களிலும், திமுக 133 இடங்களிலும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிடிவியின் அமமுக 11 இடங்களில் வெற்றிபெறும் என்பதன் மூலம் மூன்றாவது பெரும் சக்தியாக உருவெடுக்கும் என்று தெரிகிறது. கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தையும் பிடிக்கும் எனத் தெரிகிறது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல் ஹாசன், பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவி வானதியை வீழ்த்துவார் என நமது கணிப்பு கூறுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 5 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற மக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் அரசியலில் அடுத்தக்கட்டப் பயணத்தை நோக்கி நகர்வதற்கு பெரும் ஊக்கமாக இந்த வெற்றி அமையும்.
நாம் தமிழரின் நிலை
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடப் போவதாகவும், திராவிடத்திற்கு தான் தான் மாற்று என்றும் கூறிக்கொண்ட சீமானின் கட்சி ஓரிடத்தில் கூட வெல்லாது என்று தெரியவருகிறது.
சவாலைச் சந்திக்க உள்ள ஸ்டாலின்
வெற்றி பெறுவதைத் தாண்டி, கல்விக்கடன் தள்ளுபடி, மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- நிதியுதவி உள்ளிட்ட - திமுக அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், ஸ்டாலின் பெரும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும். கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஆட்சிப் பொறுப்பேற்பது புதிய அரசுக்கு பெரும் சவாலான காரியமாகவே அமையும்.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் ஆட்சி
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான புதுச்சேரியில், முன்னாள் முதலமைச்சர் என். ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகளான பாஜக மற்றும் அதிமுகவுடன் இணைந்து ஆட்சியைக் கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. அதன் விளைவாக, நாராயணசாமியின் காங்கிரஸ் தோல்வியைச் சந்திக்கிறது.
கட்சித் தாவலால் பின்னடைவு
தேர்தலுக்கு ஒரு சில வாரங்களே இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கட்சி விட்டு கட்சி மாறியதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அக்கட்சி தோல்வியைத் தழுவியது.
பாஜகவின் புதுச்சேரி வியூகம்
அதே சமயத்தில், துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி மாற்றப்பட்டு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. டெல்லியில் முதலமைச்சருக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே மோதல் நிலவியது போல, கிரண் பேடியின் பதவிக்காலத்தில், முதலமைச்சர் நாராயணசாமிக்கும், அவருக்கும் தொடர் மோதல் இருந்துவந்தது.
புதுச்சேரியில் யார் முதலமைச்சர்?
பிரெஞ்ச் காலனியாக இருந்த புதுச்சேரியில், அரசியலில் நிலையற்ற தன்மை நிலவிவருகிறது. இத்தேர்தலில், 81.69 விழுக்காடு மக்கள் வாக்களித்திருந்த நிலையில், ஆட்சி மாற்றம் உறுதி என்பது கருத்துக்கணிப்பில் தெரியவருகிறது. புதுச்சேரியில் பலம் இல்லாதபோதிலும், என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் சாமர்த்தியமாக அதிமுகவைக் காட்டிலும் கூடுதல் இடங்களைப் பெற்ற பாரதிய ஜனதா இணைந்ததன் மூலம் அந்த மாநிலத்தில் தன்னுடைய கணக்கை தொடங்கவிருக்கிறது.