கொல்கத்தா(மேற்கு வங்காளம்): கொல்கத்தாவில் இன்று நகரின் மையப்பகுதியில் உள்ள கட்டுமானப்பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் எட்டு மாதம் கர்ப்பமாக உள்ள பெண்மணியின் வயிற்றில் ஒரு நபர் எட்டி உதைத்தார். இதனையடுத்து அந்த எட்டு மாத கர்ப்பிணி ஆபத்தான நிலையில் கொல்கத்தா மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் வயிற்றில் உள்ள குழந்தைக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை எனத்தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ பரேஷ் பால் மற்றும் அப்பகுதியின் கவுன்சிலர் ஸ்வபன் சமதாரின் தொண்டர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நர்கெல்டங்கா காவல் நிலையத்தில் இதுகுறித்துப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச்சம்பவம் குறித்து முழு விசாரணை நடைபெற்று வருவதாக கொல்கத்தா காவல்துறை டிசி பிரியபிரதா ராய் கூறினார்.
இந்தச் சம்பவத்தில் புகார் அளித்த தந்தையும், மகனும் வேறு வழக்கில் முன்பு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். மேலும் அவர்கள் அளித்தப்புகாரில், ‘நர்கெல்டங்காவில் வசிக்கும் ஷிப் சங்கர் தாஸ் மற்றும் அவரது மகன் தீபக் தாஸ் ஆகியோர், அப்பகுதியில் சட்டவிரோதமாக கட்டடம் கட்டும் தொழிலுக்கு எதிர்ப்புத்தெரிவித்ததாகத்தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி கவுன்சிலரின் தொண்டர்கள், நேற்று (ஆகஸ்ட் 21) கவுன்சிலரை சந்திக்கும்படி, ஷிப் சங்கர் தாஸ் மற்றும் அவரது மகன் தீபக் தாஸ் ஆகியோரைக் கூறியுள்ளனர். அதற்கு அவர்கள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நேற்று மாலை கவுன்சிலர் மற்றும் எம்எல்ஏவின் ஆட்கள் மேற்கூறிய இருவரின் வீட்டுக்குள் புகுந்து அக்குடும்பத்தினரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த வன்முறையில் தீபக் வீட்டில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதும் தாக்குதல் நடத்தியது தெரிய வந்துள்ளது. இதில் தீபக்கின் எட்டு மாத கர்ப்பிணி மனைவி வயிற்றில் உதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுகுறித்து எம்எல்ஏ பரேஷ் பால் கூறும்போது, “அந்த பகுதியின் செயல்பாடுகளை நான் கவனிக்கவில்லை. மேலும், புகார் தெரிவிப்பவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது. எனவே, இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கூற்றுப்படி, வீட்டில் வன்முறை நடந்தபோது அவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று உதவி கேட்டுள்ளனர். ஆனால் நர்கெல்டங்கா காவல் நிலையம் இது குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மேலும், புகார் அளித்ததற்கு தீபக் மற்றும் அவரது குடும்பத்தை கைது செய்து விடுவோம் என காவல்துறையினர் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தி வெளியே கசியத்தொடங்கியதும் கொல்கத்தா காவல் துறை அலுவலர்கள் நேற்று இரவில் அப்பகுதிக்கு வந்து விசாரணையைத் தொடங்கினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் இருந்து இதுவரை 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:டெல்லி மதுபான ஊழலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை... கேசிஆர் மகள் கவிதா விளக்கம்...