அஸ்ஸாம் மாநிலத்தின் 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தற்போது வாக்காளர்களைச் சந்தித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருகின்றன.
தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது. அஸ்ஸாமில் 2021ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதேபோல, கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில், வாக்காளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் வாக்குப்பதிவை நடத்த திட்டம் வகுக்கப்பட்டுவருகிறது.
சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள், பொதுப் பிரச்சினைகள், தேர்தல் தயார்நிலை, தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள், கருத்துகள் ஆகியவற்றை அறிய அஸ்ஸாமுக்கு உயர்மட்டக் குழுவை இந்தியத் தேர்தல் ஆணையம் அனுப்புகிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை இயக்குநர் தர்மேந்திர ஷர்மா தலைமையிலான உயர்மட்டக் குழு வருகிற 11ஆம் தேதி அஸ்ஸாம் செல்லவுள்ளது. அஸ்ஸாமின் தலைமைச் செயலாளர் ஜிஷ்ணு பாருவா, 20 மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் (மாவட்ட ஆட்சியர்கள்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன் உயர்மட்டக் குழு ஆலோசனை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.
அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை உயர்மட்டக் குழுவினர் தனித்தனியாகச் சந்திப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மாநில அரசின் தயார்நிலை பற்றி இந்தக் கூட்டத்தில் ஆய்வுமேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க : நாட்டில் முதல்முறையாக பி.சி.டி. பரிசோதனை: நடைமுறைக்கு கொண்டுவந்தது சத்தீஸ்கர் அரசு!