டெல்லி : உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா பரவலை தொடர்ந்து தேர்தல் ஆணையம் சாலை பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டத்துக்கு தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்தத் தடையை தளர்த்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று (ஜன.31) காலை நடைபெற்றது.
அப்போது, சாலை பேரணிகள், பாத யாத்திரை மற்றம் வாகனப் பேரணி ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை பிப்.11ஆம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், “500 பேருக்கு மிகாமல் கட்சிகள் உள்ளரங்க கூட்டம் நடத்திக் கொள்ளலாம். சாலை பேரணி, பாதயாத்திரை, சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனப் பேரணி நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை பிப்.11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஓராயிரம் பேருக்கு மிகாமல் கட்சிகள் பொதுக் கூட்டம் நடத்திக் கொள்ளலாம். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 20 பேர் வரை செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டிருந்தது. 5 மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் மதியத்துக்குள் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதையும் படிங்க : 5 மாநில தேர்தல்: பொதுக்கூட்டம், பேரணிக்கு தடை நீட்டிப்பு!