ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள குடிமல்காபூரைச் சேர்ந்த மகேந்தர் சிங் என்ற இளைஞர் சிறுவயதிலிருந்தே உடல் பருமனால் அவதிப்பட்டு வந்தார். ஆட்டுக்காண்டுஅவரது எடை கூடிக்கொண்டே போனதால் பல்வேறு உடல் நலப் பாதிப்புகளும் ஏற்படத் தொடங்கின. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது எடை சுமார் 240 கிலோவாக இருந்தது.
அவரது உடல் எடையை குறைக்க, பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி ஒரு தனியார் மருத்துவமனையை அணுகியபோது, உடல் எடையைக் குறைக்கும் சிகிச்சைக்கு சுமார் 12 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என தெரிவித்துள்ளனர். அந்த அறுவை சிகிச்சைக்குப் பணம் இல்லாததால், மகேந்தர் சிங்கின் பெற்றோர் ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற அரசு மருத்துவமனையான உஸ்மானியா மருத்துவமனைக்குச் சென்றனர்.
அங்கு இளைஞரைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழு, அவருக்கு பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அதன்படி இரண்டு மாதங்களுக்கு முன்பு மகேந்தர் சிங்கிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையின் ஒரு வகையான இரப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சிகிச்சை நாம் உண்ணும் உணவின் அளவை கட்டுப்படுத்தும், செரிமான முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்த சிகிச்சையின் எதிரொலியாக, மகேந்தர் சிங்கின் உடல் எடை குறையத் தொடங்கியது. அறுவை சிகிச்சைக்குப் பிறகும் மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 240 கிலோ எடை கொண்டிருந்த இளைஞர், இரண்டு மாதங்களில் சுமார் 70 கிலோ அளவுக்கு எடை குறைந்துள்ளார். தற்போது அவரது உடல் எடை 170 கிலோ. உணவு உட்கொள்ளும் அளவு குறைந்ததால் எடை குறைந்துள்ளது.
இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கூறும்போது, "பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை மூலம் மகேந்தர் சிங் 70 கிலோ எடை குறைந்துள்ளார். இந்த சிகிச்சையால் சுமார் 80 முதல் 90 கிலோ வரை எடை குறைய வாய்ப்புள்ளது. அவரது எடை மிகவும் அதிகமாக இருந்ததால், அறுவை சிகிச்சை செய்யும்போது மிகவும் சிரமமாக இருந்தது. பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை மிகவும் அரிதான ஒன்று. தெலுங்கானா மாநிலத்தில் முதல் முறையாக அரசு மருத்துவமனையில் இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்த அரசு மருத்துவர்களுக்கு தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:முதுமையை தள்ளிப்போடும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இறைச்சியில் உள்ளதா?