ஹைதராபாத்: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோயில் மிகவும் பிரபலமானது. நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சீரடிக்கு சென்று வருகின்றனர். வெளிநாட்டு பக்தர்களும் சீரடி செல்கின்றனர். கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்கம், வெள்ளி, வைரம், ரொக்கப்பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். அன்னதானம், நன்கொடைகள் போன்றவற்றையும் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த தம்பதியினர் சீரடி சாய்பாபா கோயிலுக்கு அளித்துள்ள காணிக்கை வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த காமேபள்ளி - ராஜலட்சுமி தம்பதியினர் சாய்பாபாவின் தீவிர பக்தர்கள். இவர்கள் நேற்று(பிப்.12) சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.
அப்போது, சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க சங்கிலியை காணிக்கையாக கொடுத்துள்ளனர். அதில் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 31 ஆயிரத்து 752 ரூபாய் மதிப்புள்ள 1,178 கிராம் எடை கொண்ட வெள்ளித் தட்டு உள்ளிட்ட பூஜை பொருட்களையும் வழங்கினர். இதை பெற்றுக்கொண்ட கோயில் நிர்வாகிகள், தம்பதியினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இது தொடர்பாக ராஜலட்சுமி கூறும்போது, "சாய்பாபா மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. பாபாவின் ஆசீர்வாதத்தால் நாங்கள் வளர்ந்தோம். தொழிலில் நல்ல முன்னேற்றமும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் கொடுத்ததற்காக இந்த காணிக்கையை செலுத்தினோம். எங்களது ஆசைகளை பாபா நிறைவேற்றிவிட்டார். அதனால் நான், எனது கணவர், மகன் என குடும்பத்தோடு வந்து பாபாவை தரிசித்தோம். என் மகனும் பாபாவின் பெரிய பக்தன்" என்று கூறினார்.