புதுச்சேரி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் தீவிரம் அடைந்து வருகிறது, சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 வயது சிறுவன் உயிரிழந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது. இந்நிலையில் புதுச்சேரியில் கல்லூரி மாணவி உட்பட 2 பெண்கள் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி குருமாம்பேட் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஆறாவது குறுக்குத் தெருவில் வசிக்கும் ஆதி, இவருடைய மகள் காயத்ரி (வயது 19) கிருமாம்பக்கத்தில் உள்ள ராஜீவ் காந்தி தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சைகாக மூலக்குளத்தில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் நேற்று காலை 8:30 மணிக்கு சிகிச்சை பலனின்றி மாணவி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். இதனை அடுத்து மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கபட்டது. மாணவி இறந்த தகவல் அறிந்து கல்லூரி மாணவ-மாணவியர் பலரும் குருமாம்பேட்டில் வைக்கப்பட்டுள்ள மாணவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்பு நேற்று (செப். 13) மாலையே மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதேபோல் புதுச்சேரி தருமபுரியை சேர்ந்த மீனரோஷனி (வயது 28) என்ற பெண்ணும் டெங்குவால் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை இயக்குநரகத்திற்கு தகவல் கிடைத்து உள்ளது. இதனையடுத்து உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு இறப்புக்காண காரணம் குறித்து அறிக்கை வெளியீடப்பட்டு இருக்கிறது.
அந்த அறிக்கையின் படி மீனரோஷனி என்ற பெண்மணி கடந்த 4ஆம் தேதி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். எனவே அவர் புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதற்கிடையே காய்ச்சலின் பாதிப்பு தீவிரமானது.
இதனால் மீனா ரோஷினி மீண்டும் கடந்த 6ஆம் தேதி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்" என சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீ ராமுலு வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் டெங்கு அறிகுறி இருந்தால் பொது மக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வர வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சி மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நிபா வைரஸ், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்கு பிரத்யேக கூட்டம் - அமைச்சர் மா.சு தகவல்!