டெல்லி: டெல்லியில் உள்ள ஜீராபாத் சங்கம் விஹாரின் 5வது தெருவில் பைசன் என்ற இளைஞர் வசித்து வந்தார். இவருக்கு, அவரது நண்பர்கள் சிலர் உடன் கடந்த சில நாட்களாக பிரச்னை இருந்து வந்து உள்ளது. இதனால், பைசனுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.
அதிலும், பைசன் அவரது நண்பர்களிடம் இருந்து 500 ரூபாய் கடன் பெற்று விட்டு, அதனைத் திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றைய முன்தினம் பைசனின் வீட்டுக்கு வந்த அவரது நண்பர்களில் ஒருவர், பணத்தைத் திருப்பி கொடுக்காவிட்டால் பைசனை கொலை செய்து விடுவதாக குடும்பத்தினரை மிரட்டி உள்ளார்.
அப்போது, அவரை பைசனின் குடும்பத்தினர் சமாதானப்படுத்தி உள்ளனர். பின்னர், அந்த இளைஞர் அங்கு இருந்து வெளியேறி உள்ளார். பின்னர், பைசன் அன்று இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, பைசனின் வீட்டின் முன்னால் 3 இளைஞர்கள் பைசனுக்காக காத்துக் கொண்டு இருந்து உள்ளனர்.
இந்த நிலையில், வீட்டுக்கு வந்த பைசனைக் கண்டதும் அவர்கள் கத்தியால் பைசனை சரமாரியாக தாக்கத் தொடங்கி உள்ளனர். இதில், பைசனின் மார்பில் குத்திய நிலையில், அவர் அங்கு இருந்து தப்பித்துச் செல்ல வீட்டின் மாடியில் ஏற முயற்சி செய்து உள்ளார். ஆனால், அதற்குள் பைசனை வளைத்த கும்பல், அவரை 4 முறை கத்தியால் கொடூரமாக குத்தி உள்ளது.
இதனால் ரத்தம் வழிந்த நிலையில், பைசன் மாடியில் இருந்து கீழே விழுந்து உள்ளார். இதனையடுத்து பைசனின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அவரது உறவினர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முற்பட்டனர். ஆனால், அதற்குள் படுகாயங்கள் உடன் கிடந்த பைசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.
மேலும், இது தொடர்பாக உயிரிழந்த பைசனின் குடும்பத்தினர் கூறுகையில், “பைசன் அவரது நண்பர்களிடம் இருந்து எந்த பணத்தையும் பெறவில்லை. இருப்பினும், நாங்கள் அந்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கத் தயாராக இருந்தோம். ஆனால், அதற்குள் அவரது நண்பர்கள் பைசனை கொன்று விட்டனர்” என தெரிவித்தனர்.
அதேநேரம், இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல், கொலை செய்யப் பயன்படுத்திய கத்தியையும் காவல் துறையினர் சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றி உள்ளனர்.
இதையும் படிங்க: Pocso: 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 64 வயது முதியவருக்கு 95 ஆண்டுகள் தண்டனை