இந்தியாவில் இம்மாதம் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக கோவிட் மூன்றாம் அலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.
குறிப்பாக, டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தொற்று பரவல் அதிகம் காணப்பட்டது. தலைநகர் டெல்லியில், ஜனவரி 13ஆம் தேதி மூன்றாம் அலை உச்சம் தொட்டு அங்கு கோவிட் பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 94 ஆயிரத்து 160ஆக இருந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக டெல்லியில் கோவிட் பாதிப்பு நன்கு குறையத் தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி அங்கு கோவிட் காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 10 ஆக குறைந்துள்ளது. இந்த புள்ளி விவரம் மூலம் இரண்டே வாரத்தில் டெல்லியில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை பாதிக்கும் கீழ் குறைந்துள்ளது.
அங்கு ஜனவரி மாதத்தில் மட்டும் கோவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 574ஆக உள்ளது. தொடர்ந்து தொற்று பரவல் குறைந்துவரும் நிலையில், துணை நிலை ஆளுநர் அனில் பைஜல் மற்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இந்த ஆலோசனையில் கோவிட் கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அரசு ஏற்கனவே வார ஊரடங்கு கட்டுப்பாட்டை திரும்பப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: HOROSCOPE: ஜனவரி 27 ராசிபலன் - உங்க ராசிக்கு எப்படி?