தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனாவின் கோரமுகத்தை தன் கேமரா லென்ஸ் வாயிலாக உலகறியச் செய்த டானிஸ் சித்திக் இறப்பு செய்தி கேட்டு கலங்குகிறேன். வன்முறையும் பயங்கரவாதமும் எந்த வடிவில் வந்தாலும் அதை நீக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தானிஷ் சித்திக்கின் மரணச் செய்தி கேட்டு வருந்தினேன். மனிதநேயத்துக்கு தன்னை ஒப்புக்கொடுத்த ஒப்பற்ற கலைஞனை நாம் இழந்துவிட்டோம். மன வருத்தத்துடன் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், தானிஷ் சித்திக்கின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். இந்திய அரசாங்கம் தானிஷின் உடலை விரைந்து எடுத்துவர கோருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங், புலிட்சர் விருது வென்ற தானிஷ் சித்திக் நம்மோடு இல்லை. ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தலிபான் தாக்குதலில் அவர் உயிரிழந்துவிட்டார். அவர் ஒரு சிறந்த பத்திரிகையாளர், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காந்தஹாரில் நடைபெற்றுவரும் தலிபான் அட்டூழியத்தால் தானிஷ் சித்திக் இறந்த செய்தி கேட்டு மனம் வருந்தினேன். அவரது குடும்பத்தாருக்கும், ஊடக நண்பரகளுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பேச்சு சுதந்திரத்தையும், ஊடகவியலாளரை பாதுகாப்பதையும் எனது அரசு உறுதிபடுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் ஊடகவியலாளர்கள் பலரும் தானிஷ் சித்திக் இழப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒளிப்படக் கலைஞர் தானிஷ் சித்திக் உயிரிழப்பு