அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டெல்லி குரு தேக் பகதூர் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகையை ஆய்வு மேற்கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார்.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், " களத்தில் உள்ள சவால்களை அறிந்துகொள்ளும் வகையில் கரோனா ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பூசி விநியோகத்திற்காக தீட்டப்படும் திட்டத்திற்கும் அதனை அமல்படுத்தும்போது உள்ள சிக்கல்களை அடையாளம் காணும் வகையில் ஒத்திகை நடைபெற்று வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியில் மட்டும் குரு தேக் பகதூர் அரசு மருத்துவமனை, வெங்கடேஸ்வரா தனியார் மருத்துவமனை, தரியகஞ்ச் ஆரம்ப சுகாதார மையம் ஆகிய இடங்களில் தடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
ஹைதராபாத் நம்பல்லியில் உள்ள ஏரியா மருத்துவமனையில் தடுப்பூசி ஒத்திகை நடத்த தயார் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவை பொறுத்தவரை, புனே மாவட்ட மருத்துவமனையில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளது.