இந்தியாவில் கோவிட்-19(COVID-19) தொற்று பாதிப்பைக் கண்காணிக்கும் சிறப்புக் குழுவின் தலைவரான டாக்டர் வி.கே.பால்(நிதி ஆயோக் உறுப்பினர்) இன்று செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் இரண்டாம் அலை நிலவரம், தடுப்பூசித் திட்டம் ஆகியவை குறித்துப் பேசினார்.
பைசர் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
அவர் பேசியதாவது, 'பைசர்(Pfizer) நிறுவனம் இந்தியாவுக்கு தடுப்பூசி விநியோகம் செய்ய ஆர்வத்துடன் முன்வந்துள்ளது. அநேகமாக வரும் ஜூலை மாதம் இந்தியாவில் பைசர் தடுப்பூசிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
அதேபோல் உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களும் தொடர்ந்து உற்பத்தி எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றனர். வரும் செப்டம்பர் மாத காலத்தில் ஒரு மாதத்திற்கு 10 கோடி தடுப்பூசிகளை பாரத் பயோடெக் நிறுவனம், 6.5 கோடி தடுப்பூசிகளை சீரம் இந்தியா நிறுவனமும் உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மே 7ஆம் தேதி கோவிட்-19 உச்சம் தொட்ட நிலையில், கடந்த சில நாள்களாக தொற்று கணிசமாக குறைந்துள்ளது' எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி, மாத உதவித் தொகை - பினராயி விஜயன் அறிவிப்பு