கேங்கர்: சத்தீஸ்கர் மாநிலம் வடக்கு பஸ்டெர் கேங்கர் மாவட்டம் கொயிலிபேடா பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் விஷ்வாஸ். உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கடந்த திங்கள்கிழமை விடுமுறையை என்பதால், கெர்கட்டா பரல்கோட் நீர்த்தேக்கத்துக்கு சுற்றுலா சென்றார். அணையை சுற்றியுள்ள இயற்கை அழகை கண்டு ரசித்த விஷ்வாஸ், கரை ஓரத்தில் நின்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக செல்போன் தவறி அணைக்குள் விழுந்துள்ளது. அந்த செல்போன் 'சாம்சங் S23' ரகத்தை சேர்ந்தது என்றும், அதன் விலை ரூ.96,000 எனவும் கூறப்படுகிறது. விலை உயர்ந்த செல்போன் தண்ணீருக்குள் விழுந்ததால் அதிர்ச்சியடைந்த விஷ்வாஸ், நீர்வளத்துறை அதிகாரியை உடனடியாக தொடர்பு கொண்டுள்ளார்.
தனது செல்போனை எடுப்பதற்காக அணையில் உள்ள தண்ணீரை வெளியேற்றும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து அங்கு வந்த ஊழியர்கள் சிலர், ராட்சத பம்புகளை கொண்டு வந்து தண்ணீரை வெளியேற்ற தொடங்கினர். 3 நாட்களில் 21 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டு, நேற்று (மே 26) செல்போன் மீட்கப்பட்டது. மூன்று நாட்களாக தண்ணீருக்குள் கிடந்ததால், செல்போன் செயல் இழந்தது.
இந்நிலையில் செல்போனுக்காக, மக்கள் பயன்படுத்தும் தண்ணீரை வீணாக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி ராமலால் திவார் கூறுகையில், "தண்ணீருக்குள் விழுந்த செல்போனை மீட்க உதவுமாறு உணவு பாதுகாப்பு ஆய்வாளர் விஷ்வாஸ் என்னை தொடர்பு கொண்டு கேட்டார். இதையடுத்து, அணையில் இருந்து 5 அடி தண்ணீரை வெளியேற்ற வாய்மொழியாக உத்தரவிட்டேன். ஆனால் 10 அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நான் கூறியதற்கு மேலாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது எனக்கு தெரியாது" என கூறினார்.
ஏற்கனவே, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் விஷ்வாஸ், ரேஷன் கார்டு முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது. இதற்கிடையே, முதலமைச்சர் பூபாஷ் பாகெல் ஆட்சியில், இதுபோன்ற சர்வாதிகார தன்மை கொண்ட அதிகாரிகள் இருப்பதாக பாஜக விமர்சித்துள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ரமன் சிங், "செல்போனை மீட்பதற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீரால், 1,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்றிருக்கும். தவறு செய்த அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வடக்கு பஸ்டெர் கேங்கர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா சுகுலா, உணவு பாதுபாப்புத்துறை ஆய்வாளர் விஷ்வாஸை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். அதிகாரியின் செல்போனை மீட்பதற்காக, அணை நீரை திறந்துவிட்ட சம்பவம் சத்தீஸ்கரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 75 Rupees Coin: புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பையொட்டி 75 ரூபாய் நாணயம் அறிமுகம்!