டெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரண்டு கரோனா தடுப்பூசிகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், ஆஸ்ட்ராஷென்கா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி, டோஸ் ஒன்றுக்கு 219-292 ரூபாய் வரை மிக மலிவான விலைக்கே இந்திய அரசுக்கு வழங்கப்படும் என உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான இந்தியாவின் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உரிமம் பெற்று, தற்போது வரை 50 மில்லியன் டோஸ்கள் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் அதர் பூனாவாலா கூறுகையில், "கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி இந்தியா, உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட ஜிஏவிஐ நாடுகளில் முதலில் வழங்கப்படும்.
அனைவரும் வாங்கும் விலைக்குத் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். எங்களிடமிருந்து அதிக அளவில் கரோனா தடுப்பூசியை வாங்குவதால், இந்தியாவுக்கு 219-292 ரூபாய் வரை மலிவான விலைக்கே தடுப்பூசி வழங்கப்படும்.
தனியார் சந்தை விற்பனை தொடங்கிய பின் தடுப்பூசி இருமடங்கு விலைக்கு விற்கப்படும். முதலில் 50 மில்லியன் டோஸ்களை வழங்கவுள்ளோம். மாதத்திற்கு 100 மில்லியன் டோஸ்களைத் தயாரிக்கவுள்ளோம். ஏப்ரல் மாதத்திற்குள் இந்த உற்பத்தி எண்ணிக்கை இரட்டிப்பாகும்" என்றார்.
இதையும் படிங்க: ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த முடியாது: லண்டன் நீதிமன்றம் திட்டவட்டம்