கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் அகில பாரதிய இந்து மகாசபை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட துர்கா பூஜையில், துர்கா தேவி சிலைக்குக்கீழே வைக்கப்பட்டிருந்த அரக்கர்களின் சிலைகளுக்கு மத்தியில் மகாத்மா காந்தியின் சிலையும் வைக்கப்பட்டிருந்தது.
மகாத்மா காந்தி சிலை அவமதிக்கப்பட்டதாக பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்ததையடுத்து, காந்தி சிலையை அகற்ற போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், பூஜை அமைப்பாளர்கள் காந்தி சிலையை எடுக்காமல், அதன் தோற்றத்தை மட்டும் மாற்றினர். இதுதொடர்பாக அகில பாரதிய இந்து மகா சபையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காந்தி சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பிகார் காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் அசித் நாத் திவாரி, "இதில் படிப்பறிவில்லாத கும்பல், தங்களுக்கென சில சிந்தனைகளை வைத்துக்கொண்டு, நீண்ட காலமாக காந்தியக் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அந்த கும்பல் கோட்சேவை கடவுளாக ஏற்றுக்கொண்டுள்ளது. அவர்களுக்கு சிறிது அறிவைத் தரும்படியும், மன்னிக்கும்படியும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்" என்று கூறினார்.
சத்தீஸ்கர் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுஷில் ஆனந்த் சுக்லா கூறுகையில், "இது ஆர்எஸ்எஸ் மற்றும் கோட்சேவின் மனநிலையில்தான் நிகழ்த்தப்பட்டுள்ளது. இது வருந்தத்தக்கது. இந்திய மக்கள் இதனை ஏற்க மாட்டார்கள்" என்று கூறினார்.
ராஜஸ்தான் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஸ்வர்ணம் சதுர்வேதி, "இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் காந்தியின் அகிம்சை கொள்கையை ஏற்றுக்கொண்டது. காந்தியை அவமதித்த இந்த சம்பவத்தால் நாட்டில் உள்ள 125 கோடி மக்களின் உணர்வுகள் புண்பட்டுள்ளன. இவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்" என்றார்.
திரிணாமுல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குனால் கோஷ் கூறுகையில், "இந்த சம்பவத்தை நம்ப முடியவில்லை. இதைவிட இழிவான செயல் எதுவும் இருக்க முடியாது. இந்தச்சம்பவம் பண்டிகை கொண்டாட்டத்தைக் குலைத்துவிட்டது. இது எங்கள் கவனத்துக்கு வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்றார்.
திருவனந்தபுரத்திலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.ராஜா கூறுகையில், "தேசத் தந்தையை எப்படி இவ்வாறு இழிவுபடுத்த முடியும்? இந்தச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அவர்கள் காந்திக்கு ஏற்படுத்திய அவமரியாதை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்புக்கேட்க வேண்டும். அதேபோல் போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினரான ஹன்னன் மொல்லா கூறுகையில், "இது மக்களின் நம்பிக்கையினை அவமதிக்கும் செயல். அவர்கள் மக்களின் உணர்வுகளோடு விளையாடியதோடு மட்டுமல்லாமல், தேசத் தந்தையை வேண்டுமென்றே அவமதித்துள்ளனர்" என்று கூறினார்.
இதனிடையே, தங்களது நிலைப்பாட்டில் தெளிவாக இருப்பதாகவும், காந்தியை கொலைகாரன் என்றும், அசுரன் என்றும் கூற தாங்கள் தயங்கமாட்டோம் என்றும் அகில பாரதிய இந்து மகா சபையினர் தெரிவித்துள்ளனர்.