நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், கரோனா சோதனையை அதிகப்படுத்தி தடுப்பூசி விநியோகத்தை தீவிரப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சோதனை தீவிரபடுத்தப்பட்டதன் விளைவாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துவருவது தெரியவந்துள்ளது. எனவே, இதனை கருத்தில் கொண்டு, முன்னதாக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டு முறையான நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சோதனையை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து முறையான சிகச்சை அளிக்கும் வழிமுறையை கடுமையாக பின்பற்ற வேண்டும். அனுமதி வழங்கப்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எல்லைகள் முறையாக வரையறுக்கப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.